×

சட்டீஸ்கர் எல்லை முகாமில் வீரர்கள் பயங்கர மோதல் ஐந்து பேர் சுட்டுக்கொலை: சுட்டவரும் உயிரிழப்பு

ராய்ப்பூர்:  சட்டீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கேதேநர் பகுதியில், இந்தோ - திபெத் எல்லை காவல் படை பிரிவின் 45வது பட்டாலியன் முகாம் உள்ளது. இங்கு நேற்று காலை 8.30 மணியளவில் மசூதுல் ரஹ்மான் என்ற வீரருக்கும், சக வீரர்களுக்கும் இடையே  வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட மோதலில் மசூதுல் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது மசூதுலும் இறந்தார். ஆனால், அவர் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சக வீரர்களால்  கொல்லப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 காயம் அடைந்த 2 வீரர்களும் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் தலைமை காவலர்களாக பணியாற்றி வந்த மகேந்திர சிங், தல்ஜித் சிங் என்பதும், சுர்ஜித் சர்கார், பிஸ்வரூப் மேக்தோ, பிஜேஷ் என்ற 3 பேரும் வீரர்களாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த  உல்லா, ராஜஸ்தானை சேர்ந்த சீதாராம் டூன் என்று தெரியவந்துள்ளது.



Tags : soldiers ,Chhattisgarh ,shooter ,border camp massacre ,border camp ,clash , Chhattisgarh, border ,camp,soldiers,shooter killed
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி