×

சூடான் தொழிற்சாலையில் பயங்கரம் கேஸ் டேங்கர் வெடித்து 18 இந்தியர்கள் பலி: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கர்தோம்: சூடான் நாட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலையில்  கேஸ் டேங்கர் வெடித்து, 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் பலியாயினர். இவர்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில், 130 பேர் காயம் அடைந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று சூடான். இதன் தலைநகரம் கர்தோம். இங்குள்ள பஹ்ரி என்ற இடத்தில், செராமிக் ஓடுகளை தயாரிக்கும் சீலா செராமிக் என்ற தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைகள் நேற்று முன்தினம் ஊழியர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள எல்பிஜி கேஸ் டேங்கர் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 23 தொழிலாளர்கள் கருகி பலியாகினர். இவர்களில் 18 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் இதில் அடங்குவர். மேலும், 130 பேர் காயமடைந்தனர். தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு குறைபாடே, கேஸ் டேங்கர் வெடிப்புக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர். இது குறித்து இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தில் 18 இந்தியர்கள் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. உடல்கள் முழுமையாக எரிந்துள்ளதால், பலியானவர்களை அடையாளம் காண முடியவில்லை. சீலா செராமிக் தொழிற்சாலையில் 68 இந்தியர்கள் பணியாற்றினர்,’ என கூறப்பட்டுள்ளது. சூடானில் உள்ள இந்திய தூதரகம், www.eoikhartoum.gov.in என்ற தனது இணையதளத்தில், தொழிற்சாலையில் இருந்து காணாமல் போன இந்தியர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்கள் பட்டியலையும், தகவல் தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ராஜசேகர், வெங்கடாச்சலம் ஆகிய 3 பேர் உட்பட 16 பேர், காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர்.

படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் உட்பட 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், பூபாலன், முகமது சலீம் உட்பட 4 பேர் பொதுப் பிரிவிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல்களை அறிய ஹாட்லைன் வசதி
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விபத்தில் இந்தியர்கள் சிலர் பலியாகி இருப்பதையும்,  காயம் அடைந்து இருப்பதையும் கேட்டு மிகவும் வருந்துகிறேன். இந்திய தூதரகத்தின் பிரதிநிதி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். பலியானவர்கள் பற்றிய தகவல்களை அறிவதற்காக, 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஹாட்லைன் வசதி, ‘+249-921917471’ என்ற எண்ணில் தொடங்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம்,’ என கூறியுள்ளார்.



Tags : Indians ,Tamil Nadu ,factory ,accident ,Case ,Sudan ,Terror , Sudan factory, gas tanker, Indians killed, Tamil Nadu
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...