×

106 நாட்களுக்குப் பின் நிபந்தனை ஜாமீன் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தொடர்ந்த  வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்  நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 106 நாட்களுக்குப் பிறகு  டெல்லி திகார் சிறையில் இருந்து நேற்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு  மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, மும்பையைச் சேர்ந்த இந்திராணி  முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா  நிறுவனம், மொரிஷியசில் இருந்து நேரடிய அன்னிய முதலீடு திட்டத்தின் கீழ்  ரூ.305 கோடி பணம் பெற்றது. இதற்கு தேவையான தடையில்லா சான்றிதழை ப.சிதம்பரம்  முறைகேடாக பெற்றுத் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சான்றிதழை  பெறுவதற்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி  சிதம்பரம் உதவி செய்ததாகவும்,  இதற்காக, தனது நிறுவனத்தின் மூலம் லஞ்சம்  பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக,  சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 5  பிரிவுகளின் கீழ் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 24 நாட்கள்  திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், பிறகு ஜாமீனில் வெளியே  வந்துள்ளார். இதே வழக்கில், ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ  கைது செய்தது. திகார் சிறையில் இருந்தபோது, ப.சிதம்பரத்தை தனது வழக்கில்  அமலாக்கத் துறையும் கைது செய்து விசாரித்தது.

இந்நிலையில், சிபிஐ.யின்  வழக்கில் சிதம்பரம் ஜாமீன் பெற்றார். ஆனால், அமலாக்கத் துறை கைது  செய்ததால், சிறையில் இருந்து அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.  அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கிலும் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த  மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர் நீதிமன்றமும்  தள்ளுபடி செய்தன. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர்  மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட  அமர்வு, தொடர்ந்து 2 நாட்கள் விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பு  செய்த வாதத்தில், ‘இந்த வழக்கில் ப.சிதம்பரம் செய்தது பொருளாதார குற்றம்.  இது மக்களின் நம்பிக்கையை அழிக்கும் செயல். அதேபோல், 16 நாடுகளில் அவர் வங்கி கணக்குகளை வைத்துள்ளார். வெளிநாடுகளில் 12 சொத்துக்களை வாங்கி  குவித்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு ஜாமீன்  வழங்கினால், ஆதாரங்களையும், சாட்சியங்களையும் குலைத்து விடுவார்,’ என  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, ப.சிதம்பரம்  தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு  வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம்  28ம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பானுமதி  தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,  ‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றம் நடந்துள்ளது என்றால், அதை   கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அது குறித்து ஆய்வுகளையும் விசாரணை  அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை  ஜாமீன் வழங்க உத்தரவிடப்படுகிறது. அவர் ஜாமீன் தொகையாக ரூ.2 லட்சத்தை  நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். ஜாமீனில் வெளியே இருக்கும்போது  ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ,  பொதுவெளிப் பேச்சு நிகழ்ச்சிகளில்  பங்கேற்கவோ கூடாது. வழக்கு தொடர்பாக அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில்  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்கும்,  மிரட்டும் செயல்களில் ஈடுபடக் கூடாது. வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது. தனது  பாஸ்போர்ட்டை அரசிடம் அவர் ஒப்படைக்க வேண்டும்,’ என நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ப.சிதம்பரத்தின்  வழக்கறிஞர்கள், சிபிஐ சிறப்பு நீதீமன்றத்தில் கொடுத்தனர். அதனை பரிசீலனை  செய்த சிபிஐ நீதிமன்றம், சிதம்பரத்தை சிறையில் இருந்து விடுக்க  உத்தரவிட்டது. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து, திகார்  சிறையில் இருந்து நேற்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து நேற்றுடன் 106 நாட்கள்  ஆகின்றன. இதில், 80 நாட்களுக்கும் மேலாக அவர் திகார் சிறையில் இருந்தார்.  மற்ற நாட்கள், இரு விசாரணை அமைப்புகளின் விசாரணையில் இருந்தார்.

அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி?

உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது, ‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்,  சிபிஐ தொடர்ந்த வழக்கில் மட்டும்தான் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார். அவரை  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என அமலாக்கத் துறை  தெரிவித்தது. இதனால், இதே வழக்கில் அமலாக்கத் துறையால் அவர் எப்போது  வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

‘நாடாளுமன்றத்துக்கு இன்று முதல் வருவார்’


ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம், வியாழன் (இன்று)  முதல் அவை நடவடிக்கையில் பங்கேற்பார். என் தந்தைக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

106 நாள் சிறை வாசம் வஞ்சகம், பழிவாங்கல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘ப.சிதம்பரத்தின் 106  நாள் சிறை வாசம் வஞ்சகமானது, பழிவாங்கும் நடவடிக்கை. அவருக்கு உச்ச  நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நியாயமான  விசாரணையின் மூலம், ப.சிதம்பரம் தன்னை நிரபராதி என்பதை நிரூபிக்க முடியும்  என நம்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

‘என் மீதும், மோடி மீதும் பொய் வழக்குகள்’


மத்திய  சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில்,  ‘‘நாங்கள் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால்,  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்,  மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம்  இருந்தபோது, பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் என் மீது பொய் வழக்குகளை பதிவு  செய்ய வைத்தார். ஆனால், எங்களிடம் உண்மை இருந்தது. இதனால் நாங்கள்  நிரபராதிகள் என்று எங்கள் மீதான  வழக்குகளில் நிரூபித்தோம். அதுபோன்று தன்  மீதான வழக்கில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கட்டுமே” என்றார்.

இரவு 8 மணிக்கு வெளியே வந்தார்

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, அதற்கான ஆவணங்கள் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக விடுதலைக் கைதிகள், ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்கள் மாலை 6 அளவில் வெளியே சிறையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள். ஆனால், ப.சிதம்பரம் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்படும் தகவல் அறிந்து, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சிறை முன்பு கூடிவிட்டனர். இதனால், அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டத்தை கட்டுப்படுத்திய பின்னர் இரவு 8 மணியளவில் முன்புறத்தில் உள்ள மெயின் கேட் வழியாக ப.சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். சிறை முன்பு தன்னை வரவேற்க கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு புறப்பட்ட ப.சிதம்பரம், நேராக சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆலோசனை நடத்திய பிறகு தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Tags : P. Chidambaram ,SC ,Supreme Court , P. Chidambaram released, jail , conditional bail after 106 days
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...