×

மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் பலி ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டம் பாயுமா?

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் பலியான விபத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிய கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி காலனியில் கடந்த திங்கட்கிழமை  அதிகாலையில் ஓட்டு வீடுகள் மீது ஜவுளிக்கடை அதிபரின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நடந்த ஏ.டி. காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை. பெரும்பாலான வீடுகள் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெற்று கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், பல வீடுகளுக்கு அரசின் உதவித்தொகை கிடைக்காத காரணத்தால், ஓட்டு வீடுகளாகவே உள்ளன. அப்படிப்பட்ட வீடுகள்தான் இடிந்து விழுந்து, உயிர்பலி வாங்கியுள்ளது. இச்சம்பவத்திற்கு, அபாயகரமாக கட்டிய கருங்கல் காம்பவுண்ட் சுவரே காரணமாக இருந்துள்ளது. அதனால், சுவரை கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் (60) மேட்டுப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 ஏ-வின்படி வழக்குப்பதியப்பட்டது. அஜாக்கிரதையாக ஒரு செயலை செய்து, அதன்மூலம் யாருக்காவது மரணம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல் புரிந்தால், இப்பிரிவின்கீழ் விசாரிக்கப்படும். இப்பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக அபராத தொகையுடன் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்தநிலையில், சிவசுப்பிரமணியம் மீது 304-ஏ பிரிவுக்கு பதிலாக 304(2) என்ற பிரிவு நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டது. தன் செயலால் பிறருக்கு மரணம் ஏற்படும் என தெரிந்தே ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டால் இப்பிரிவின்கீழ் விசாரிக்கப்படும். இக்குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதற்கிடையில், சிவசுப்பிரமணியம் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ஏ.டி. காலனி மக்கள், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயவில்லை. இதுபற்றி கோவை மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’ஒரு நபர் தன்னைவிட தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ஒருவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி, தாக்குதல் நடத்தி, காயம் ஏற்படுத்தினாலோ அல்லது மரணம் அடைய செய்தாலோ மட்டுமே வன்கொடுமை சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்றார். நடூர் பகுதி மக்கள் கூறுகையில், இந்த பெரும் வலியை உண்டாக்கிய ஜவுளிக்கடை அதிபருக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது’ என்று கூறினர்.

Tags : Mettupalayam Mattupalayam , 7 people killed , Mattupalayam
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...