×

மேட்டுப்பாளையம் அருகே 17 பேரை ‘காவு’ வாங்கிய இடத்தில் உயிர்ப்பலிக்கு காத்திருக்கும் அடுத்த சுவர் : இடித்து தள்ளக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்

கோவை: நடூரில் உள்ள 15 அடி உயர விரிசல் சுவரையும், அடுத்த காம்பவுண்ட் சுவரையும் இடிக்கக்கோரி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட  29-வது வார்டு நடூர் பகுதியில் ஏ.டி. காலனியில் கடந்த 2ம் தேதி காம்பவுண்ட் சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் பலியாகினர். அதே தெருவில் பக்கத்தில் அண்ணா நகர் பள்ளம் என்கிற ஓடை  உள்ளது. இந்த பள்ளம் அருகில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பள்ளத்தின் அருகில் தனியார் காம்பவுண்ட் சுவர் ஒன்று 15 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, காம்பவுண்ட் சுவரின் அடிப்பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அப்படி விழுந்தால், ஏ.டி. காலனிபோல் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த காம்பவுண்ட் சுவரை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அண்ணாநகர் பகுதி மக்கள், காம்பவுண்ட் சுவர் உரிமையாளரிடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அப்பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் கூறுகையில், “அண்ணா நகர் பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து இந்த காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. அருகில் ஏ.டி. காலனிபோல் வீடுகள் உள்ளதால் இங்கேயும் உயிர்ப்பலி நடக்கும் முன் அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும். காம்பவுண்ட் சுவரின் அடிப்பகுதி முழுவதும் அரிக்கப்பட்டு, பில்லர் மட்டும் வெளியே தெரிகிறது. எப்போ இடியுமோ? என தெரியவில்லை”
என்றார். அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் கூறுகையில், “காம்பவுண்ட் சுவர் கட்ட,  ஓடையை மேடாக்கி, எங்களது வீடுகளை பள்ளமாக்கிவிட்டனர். இன்னொரு சம்பவம் இதேபோல் ஏற்படக்கூடாது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தனியாருக்கு அதிகாரிகள் வளைந்து கொடுக்கிறார்கள். இந்த போக்கை மாற்றவேண்டும்” என்றார்.

நாயை விட்டு துரத்துறாங்க...:  நடூரில் 17 பேர் பலியான வீடுகளுக்கு அருகே வசிக்கும் சந்திரா கூறுகையில், ‘உயிர்ப்பலி வாங்க காரணமாக இருந்த  காம்பவுண்ட் சுவரை இடிக்கவேண்டும் என நாங்கள் வீட்டின் உரிமையாளரை பலமுறை சந்தித்து கோரிக்கை விடுத்ேதாம். அப்படி சந்திக்க செல்லும்போது, வீட்டில் உள்ள நாயை அவிழ்த்துவிட்டு எங்களை துரத்துவாங்க. வீட்டை விட்டு யாரும் வெளியே வரமாட்டாங்க. அதிகாரிகளை சந்திக்க சென்றாலும், எங்களை மதிப்பதில்லை. நாங்கள் கொடுக்கும் மனுவைக்கூட வாங்குவது இல்லை. இனி ஒரு உயிர் இங்கே போகக்கூடாது. இடிந்து பாதி நிலையில் மீதமுள்ள காம்பவுண்ட் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றார். இதனிடையே,  17 பேர் பலியான பகுதியில் சுமார் 15 அடி உயரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரை மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து நில அளவையர்கள், வருவாய்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு செய்தனர். அந்த சுவரை முழுமையாக அளந்தனர்.

தங்க இடமின்றி 2 குழந்தையுடன் தவிக்கும் பெண்

சுவர் இடிந்த விபத்தில் குருசாமி என்கிற தொழிலாளியும் இறந்தார். இவரது மனைவி சுதா.  சம்பவத்தன்று குழந்தைகள் வைஷ்ணவி, மணிகண்டன் ஆகியோருடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தார். இதனால் மூவரும் உயிர் தப்பினர். வீட்டில் இருந்த குருசாமி மட்டும் உயிரிழந்தார். கணவனையும், வீட்டையும் இழந்த சுதா கூறுகையில், ‘‘தங்க இடமில்லாமல், சாப்பிட வழியில்லாமல், மாற்று துணிகூட இல்லாமல் இரு குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மறுவாழ்வு அளிக்க வேண்டும்’’ என்றார்.

‘மாணவி கையெழுத்தை அழிக்க மனமில்லை’

நடூர் பகுதியில் பலியான 17 பேரில் அக்‌ஷயா (8), லோகுராம் (9), மகாலட்சுமி (9) ஆகிய மூவரும் அங்குள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் படித்து வந்தனர். அக்‌ஷயா 3ம் வகுப்பும், மகாலட்சுமி, ேலாகுராம் ஆகியோர் 4ம் வகுப்பும் படித்தனர். பலியான மாணவர்களுக்கு நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி, இடைநிலை ஆசிரியர் சுகந்தி ஆகியோர் கூறுகையில், ‘அக்‌ஷயா, மகாலட்சுமி ஆகியோர் நன்றாக நடனம் ஆடுவார்கள். மாணவன் லோகுராம் அமைதியான பையன். கடந்த வாரம், சக மாணவர்களிடம் படிச்சு பெரிய ஆளாகி, பெரிய வீடு கட்டனும் என சொல்லியுள்ளான். கடந்த சனிக்கிழமை வகுப்பு நடந்தபோது அக்‌ஷயா போர்டில் க்+அ=க முதல் ன்+ஆ=னா வரை தமிழ் எழுத்துக்களை எழுதியிருக்கிறாள். இப்போது அவள் பலியாகி விட்டதால் போர்டில் எழுதியதை அழிக்கவே மனம் இல்லை. இயற்கை இப்படி சதி செய்யும் என கனவிலும் நினைத்துகூட பார்க்கவில்லை’’ என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Tags : Mettupalayam ,dispute ,Gau ,demolition , next wall awaiting , livelihood , 17 people,Mettupalayam
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்