×

வெளிநாட்டவர், பணக்காரர் கையில் செல்வதை தடுக்க வேண்டும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை ரயில்வேயில் இனி சாத்தியமில்லை

சென்னை : அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் இணைந்து  சென்னை பெரம்பூரில் மூன்று நாள் மாநாடு நடத்துகிறது. இதில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். நேற்று நடந்த மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.  நாளை பெண்கள் அணியும், தொடர்ந்து கருத்தரங்கமும் நடக்கிறது.
இதுதொடர்பாக, சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா செய்தியாளர்களிடையே கூறியதாவது: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  சென்னை பெரம்பூரில் இயங்க கூடிய ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலியில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவில் 90% பணிகளை முடித்து விட்டது. இந்த இரண்டு தொழிற்சாலைகளும் தனியாரிடம்  ஒப்படைக்கப்படும் நிலையில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் செலவு தற்போதைய செலவை விட பல மடங்கு அதிகமாகும்.

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் 18 ரயிலின் மொத்த செலவு 94 கோடி ரூபாய். அதுவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு தயார் செய்தால் 250 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும். இதேபோல் மற்ற ரயில்வே துறை சார்ந்த பணிகளையும் தனியாருக்கு ஒப்படைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். இளைஞர்களுக்கு நிரந்தர வேலை என்பது ரயில்வே துறையில் இனி சாத்தியம் இல்லை. ஒப்பந்த அடிப்படையிலேயே இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதால் ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறை வெளிநாட்டவர் கைகளிலும், பெரிய பணக்காரர் கைகளிலும் சென்று விடாமல் தடுக்க வேண்டிய காலநிலை  தற்போது ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் இந்த மாநாட்டில் சீர்தூக்கிப் பார்த்து நாளை மறுநாள் பல மூத்த தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : foreigners ,rich , Permanent work , young people,no longer possible ,railways, prevent foreigners
× RELATED தமிழ்நாட்டில் அதிக அணைகளை கொண்ட...