×

டாஸ்மாக் கடைகளுடன் பார்களை நடத்துவதால் சமூக முன்னேற்றம் எதுவும் ஏற்பட போவதில்லை

* உயர் நீதிமன்றம் கருத்து
* வடபழனி கடைக்கு இடைக்கால தடை

சென்னை: சென்னை வடபழனியை சேர்ந்த வாசுதேவன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த   பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: வடபழனி நெற்குன்றம் பாதையில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கடைக்கு வருபவர்களின் வாகனங்கள் 100 அடி சாலையில்  நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த டாஸ்மாக் அமைந்துள்ள கட்டிடம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது குடியிருப்பு கட்டிடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் அதை மறைத்து அந்த கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் கடை திறந்து உள்ளது என்று பதில் தரப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு சாலையில் போகும் பொதுமக்களுக்கு தொந்தரவு தருகிறார்கள். பல நேரங்களில் இவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. டாஸ்மாக் நிர்வாகம்  மதுக்கடைகளுடன் பார்களை நடத்துவதால் சமூக முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இடைக்கால தடை விதிக்க போதிய முகாந்திரம் உள்ளது. தடை விதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவர். எனவே, மனுதாரர் குறிப்பிட்டுள்ள டாஸ்மாக் கடையை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : task shops , Bars with task shops ,not going ,make any social progress
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்கும்...