×

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் : பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதல் டிஜிபி உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது. அவரது ஓராண்டு பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று கூறி சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும், ஐஜி பொன்.மாணிக்கவேல் உச்ச நீதிமன்ற உத்தரப்படி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டு 5 நாட்கள் ஆன நிலையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களும் கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வில்லை.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டபோது கையாண்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே பொன்.மாணிக்கவேல் தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளது. எனவே அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிலை கடத்தல் பிரிவின் புதிய ஐ.ஜி.,யாக ஐபிஎஸ் அதிகாரி அன்புவை நியமித்து நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நேற்று டெல்லியில் பேட்டியளிக்கையில், ‘‘பதவியில் இல்லாத பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசிடம் கொடுக்காமல் வைத்திருப்பது சட்டவிரோதமானது. பொன்.மாணிக்கவேல் இன்று (நேற்று) மாலைக்குள் சிலை கடத்தல் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஒப்படைக்கா விட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’’ என்றார்.

Tags : Abduction , Immediately hand over , documents of the abduction
× RELATED “சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும்...