ஆழ்கடலில் சிக்கியுள்ள 650 மீனவர்களை கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறவாய்ப்புள்ளது. இதனால் வங்காள விரிகுடா மற்றும் குமரி கடற்கரை பகுதிகளில் இயங்கும் மீன்பிடி படகுகளுக்கு மீன்வள துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகுகளை உடனடியாக அருகில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு பத்திரமாக திரும்பிடவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், இந்த வானிலை எச்சரிக்கை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர், கிராம பங்கு தந்தையர்கள், மீனவ பிரதிநிதிகள் மற்றும் படகு உரிமையாளரின் குடும்பங்களுக்கு நேரிடையாகவும் தெரிவிக்கப்பட்டு, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் படகுகளுக்கு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.

சுமார் 50 விசைப்படகுகள், 650 மீனவர்களுடன் கோவாவில் இருந்து 250 முதல் 270 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், அப்பகுதியில் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவர்களை உடனடியாக பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட, கோவா, மும்பை மற்றும் கொச்சின் இந்திய கப்பல்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினரிடம் குளச்சல் மீன்துறை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையானது கப்பல்கள் மற்றும் அருகில் உள்ள சரக்கு கப்பல்களை தொடர்பு கொண்டு ஆபத்தில் இருக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய கடலோர காவல்படையின் கப்பல் சமுத்திர பிரகாரி, சரக்கு கப்பல்கள் டொவாடா, நவ்தேனு, நியூ எண்டர்பிரைஸ் ஆகிய கப்பல்கள் மீன்பிடி படகுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று, ஆபத்திலிருந்த 22 விசைப்படகுகளில் இருந்து 220 மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Jayakumar ,fishermen ,sea , safely rescue 650 fishermen, stranded in deep sea
× RELATED திசை திருப்புகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: திமுக பதிலடி