பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ‘ஒன் ஸ்டாப் சென்டர்’

* 13 மருத்துவமனைகளில் அமைக்கப்படுகிறது

* 9 மாதங்களில் முடிக்க இலக்கு

சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க 13 மருத்துவமனைகளில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ அமைக்கப்படுகிறது. இதற்காக தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் 9 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பெண்கள் மீது வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (ஓஎஸ்சி) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் உத்தரவின் பேரில் இந்த மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒன் ஸ்டாப் சென்டர் அமைக்க மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்குகிறது. முதற்கட்டமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி ஆசாரி பள்ளம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருத்தணி மருத்துவமனை உட்பட 13 இடங்களில் ஒன் ஸ்டாப் சென்டர் அமைக்கப்படுகிறது.

ெதாடர்ந்து, 19 மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 13 இடங்களில் ஒன் ஸ்டாப் சென்டர் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்படுகிறது. இப்பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ஒன் ஸ்டாப் சென்டரில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். டாக்டர்கள் மூலம் கவுன்சலிங்கும் வழங்கப்படும். இந்த சென்டரில் அனுமதிக்கப்படும் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சரியான பிறகே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த மையத்தில் போலீஸ், வழக்கறிஞர், டாக்டர்கள், செவிலியர்கள், டி பிரிவு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்’ என்றார்.

Related Stories:

>