ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு 2016 இடஒதுக்கீட்டை பின்பற்றும் மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கு2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டை தான் மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்தார். இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்தும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்த பின்புதான் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தற்போது, தேர்தல் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டைதான் மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதன்படி 12 ஆயிரத்து 524 ஊராட்சி மன்ற தலைவர், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர், 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு தான் பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறை ெசய்யப்பட்டு 2016ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடைவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்த உத்தரவிட்டது. அதன்படி வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. இதில் வார்டுகளின் எல்லைகள் மட்டுமே மாறியுள்ளது. எண்ணிக்கை மாறவில்லை. எனவே தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு மாற்றப்படவில்லை. இதன்படி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடுதான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : State Election Commission ,reservation ,Rural Local Authorities , State Election Commission ,2016 reservation,Rural Local Authorities
× RELATED பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட...