ஈரோடு உட்பட நாடு முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டு எதிரொலி: ஹவாலா பணத்தில் காங்கிரசுக்கு ரூ.170 கோடி?...வருமான வரித்துறை நோட்டீசால் பரபரப்பு

புதுடெல்லி: ஈரோடு உட்பட நாடு முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் எதிரொலியாக, ஹவாலா பணத்தில் காங்கிரஸ்   கட்சிக்கு ரூ.170 கோடி வழங்கப்பட்டதாக கூறி, அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தென்   மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான நலத்திட்டங்கள்  மற்றும் மிக பெரிய அளவிலான உள்கட்டுமான பணிகளுக்கு   ஒதுக்கப்பட்ட நிதியில்  பல்வேறு நிறுவனங்கள் முறைகேடு செய்துள்ளன.

 இந்நிதியை இடைத்தரகர்கள்,  ஆபரேட்டர்கள், ஹவாலா டீலர்கள் மூலம்  ஊழல்வாதிகள் முறைகேடு செய்வதாக  எழுந்த குற்றச்சாட்டின் கீழ் வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் பல்வேறு  இடங்களில்   சோதனைகளை நடத்தி வருகின்றனர்.  மத்திய வருமான வரித்துறையின் (ஐடி) கொள்கையை உருவாக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்ட   அறிக்கையில், வரி ஏய்ப்பு தொடர்பான சோதனைகள் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்பட்டன. டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே, ஆக்ரா,   தமிழகத்தின் ஈரோடு மற்றும் கோவாவில் உள்ள நிறுவனங்களின் 42 வளாகங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.  அதன்படி வரி ஏய்ப்பு தொடர்பான  போலி பில்கள் வழங்கியது மற்றும் ஹவாலா பணப் பரிவர்த்தனைகளை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று அந்த அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஹவாலா ஆபரேட்டர்கள் மூலம்   பணப்பரிமாற்ற மோசடிகள் நடந்துள்ளன என்றும், அத்துடன் போலி ஒப்பந்தங்கள் மூலம் 3,300 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மோசடிகள்   நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 3,300 கோடி ரூபாய் ஹவாலா மோசடி வழக்கில் வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு  பகுதியாக ஐதராபாத்தை தளமாகக் கொண்ட   நிறுவனத்திடமிருந்து ரூ.170 கோடி நிதி  பெற்றதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பாக, அக்கட்சிக்கு சிபிடிடி நோட்டீஸ்   அனுப்பி உள்ளதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: டெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்புத் துறையில்   முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் பல சோதனைகள் நடந்தப்பட்டன.  அதன்பின்னர் கடந்த மாதம் முதல், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ்   அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஐதராபாத்தை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனம் ரூ.170 கோடி நிதி   வழங்கியுள்ளது.

 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில மூத்த நிர்வாகிகள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியும்  இந்த வழக்கில், கண்காணிப்பு   வளையத்தில் உள்ளன.  மேலும், ஆந்திராவின் ஒரு முக்கிய நபருக்கு ரூ.150 கோடிக்கு மேல் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களும் தேடலின்   போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரெய்டில் ரூ.4.19 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.   தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.170 கோடி கொடுத்த ஆவணம் சிக்கியுள்ளதால், இதுகுறித்து விளக்கமளிக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்   அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : raid ,country , Raid echo throughout the country including Erode
× RELATED விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்...