அரசியல் ரீதியாக மோத முடியுமா?....ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால்

திருமலை: தைரியம் இருந்தால் அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள், மோதுங்கள் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு அம்மாநில முன்னாள்  முதல்வர்  சந்திரபாபு சவால் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் 2நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கு தேசம்  கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான  சந்திரபாபு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது: ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நாற்காலிகளை  கொண்டு சென்றதாக முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சிவபிரசாத்தை இந்த அரசு அவமானப்படுத்தி  மிரட்டி தற்கொலை செய்யும் நிலைக்கு  தள்ளியது.

இது முழுக்க முழுக்க அரசு செய்த கொலையாகும். அமராவதி நகரில் சுற்றுப்பயணம் செய்ய சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் என் மீது   தாக்குதல் நடத்தினர். செருப்பு மற்றும் கற்களை வீசினர். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது பொய் புகார்களை வழங்கி வழக்குப்பதிவு செய்து பழி   வாங்கி வருகின்றனர். டாக்டர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த மாநிலத்தில்  சட்டம்-ஒழுங்கு எந்த  அளவிற்கு உள்ளது என்பது இதன் மூலமாக தெரிய வருகிறது.

பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகரீகமான உலகில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். சில போலீசார்   வேண்டுமென்று தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கின்றனர்.  ஆளும் கட்சி அமைச்சர்கள் ஆபாசமாக திட்டி வருகின்றனர். ஓரளவுக்கு மட்டுமே  பொறுமையாக இருக்க முடியும். தைரியம் இருந்தால் எங்களுடன்  அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள். எங்களை விட மாநிலத்தில் அதிக  வளர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினீர்களே. அதனை செய்து காண்பிக்க  வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>