×

புனித சவேரியார் கோயில் விழா நிறைவு: 351 கிடா, 300 கோழிவெட்டி விருந்து

மணப்பாறை: மணப்பாறை அருகே கோயில் விழாவில் 351 கிடா, 300 கோழிகளை வெட்டி கமகம விருந்து நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில்  இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. திருவிழா நிறைவு நாளன்று இரவு மாபெரும் சமபந்தி அன்னதானம் நடத்துவார்கள். இதற்காக விருப்பம் உள்ள மக்கள் காணிக்கையாக அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவார்கள். அன்னதானத்திற்காக 351 ஆட்டு கிடாக்கள், 300 கோழிகள், 150 மூட்டை அரிசி காணிக்கையாக வழங்கப்பட்டது. இதுதவிர பலர் பணமாகவும் காணிக்கை வழங்கினர். இந்த பணத்தை கொண்டு சமையலுக்கு தேவையான இதர பொருட்களை வாங்கினர். வெங்காயம் விலை உயர்ந்திருந்தபோதும், இந்த அன்னதானத்திற்காக 450 கிலோ பெரிய வெங்காயம் ரூ54 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டது. நேற்று காலை சமையல் பணியை ஜெபத்துடன் தொடங்கினர். சில சமையல் கலைஞர்கள் மட்டும் சம்பளத்துக்கு வந்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட ஆலய பங்கு மக்கள் சமையல் பணியில் உதவினர். மாலை 5மணிக்கு சமையல் முடிவடைந்தது. 150 மூட்டை அரிசியும் சமைக்கப்பட்டது. 351 கிடாக்களைவெட்டி குழம்பு வைத்தனர். 300 கோழிகளையும் குழம்பாக வைத்தனர்.

இது தவிர வெங்காய பச்சடி, ரசம் ஆகியவையும் தயாரிக்கப்பட்டது. 6 மணிக்கு சமபந்தி அன்னதானம் தொடங்கியது. 25 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் இங்கு உணவருந்தினர். சாப்பிடுவதற்கு மேஜை, பெஞ்ச், நாற்காலிபோடப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் தரையிலும் அமர வைத்து சாப்பாடுசரிமாறப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் பந்தி நிறைவடைந்தது.கடைசி வரை அனைவரும் மட்டன், சிக்கன் குழம்புடன் சாப்பிட்டனர். இதுகுறித்து மஞ்சம்பட்டி பங்கு மக்கள் கூறும்போது, ‘‘27ம் ஆண்டாக இந்த அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்திற்காக காணிக்கை அளிக்கலாம் என வேண்டுகோள் விடப்பட்டதை தொடர்ந்து மக்கள் சமய பாகுபாடின்றி அனைவரும் காணிக்கை கொடுத்து வருகிறார்கள். இதனால் இன்று இவ்வளவு பெரிய அன்னதான விருந்தாக மாறி விட்டது. இந்த கோயில் பங்கு மக்கள் வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் அடுத்த வாரமே ஒரு கிடாவை குட்டியாக வாங்கி கோயிலுக்கு என்று நேர்ந்து விட்டு விடுவோம். அடுத்த முறை திருவிழா வரும்போது கோயிலுக்கு கொடுத்துவிடுவோம். இப்படித்தான் ஆடு,கோழி, அரிசி, பணம் இங்கு வருகிறது. வேண்டுதல் நிறைவேறியதற்காக நன்றி தொிவித்துஇவ்வாறு மக்கள் வழங்குகிறார்கள்’’ என்றனர்.

Tags : St. Saviour's Temple Ceremony , St. Saviour's Temple, Ceremony, Feast
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...