அரியலூர் அருகே பரபரப்பு: குடிநீர் கிணறு உள்வாங்கியது

அரியலூர்: அரியலூர் அருகே பஞ்சாயத்துக்க சொந்தமான குடிநீர் கிணறு திடீரென பூமிக்குள் உள்வாங்கியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குமிழியம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகில்  ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. பொதுமக்களின்  குடிநீர் தேவைக்காக காமராஜர்  ஆட்சி காலத்தில் இந்த கிணறு வெட்டப்பட்டது. சுமார் 55 ஆண்டு காலமாக இந்த  கிணற்று தண்ணீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கோடை காலத்தில் கூட இந்த கிணற்றில் தண்ணீர் இருக்கும். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த பருவமழையால் கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பியது. கிணற்றை சுற்றி கட்டப்பட்ட சுவர்கள் நீண்ட காலமானதால் பலமிழந்து இருந்தாலும், கிணறு நிரம்பியதாலும் அதன் சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது.

3 அடி உயரமுள்ள கிணற்றின் மேல்மட்ட சுவரில் நேற்றுமாலை திடீரென 7 இடங்களில் கீறல் விழுந்தது. அதைத்தொடர்ந்து வட்டவடிமான அந்த கிணற்றின் சுவரை சுற்றி இடைவெளி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கிணறு உள்வாங்கி  தரைமட்டத்திற்கு வந்தது. அதன்பிறகு கிணற்றில் 3 அடி உயர சுவர் மேலும் கீழே இறங்கியது. இப்போது அந்த கிணற்றில் 3 அடி உயர சுவர் தரைமட்டத்தில் இருந்து ஒரு அடி கீழே இறங்கியது. இதுபற்றிதகவல் அறிந்த கிராமமக்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். எதனால் கிணறு உள்வாங்கியது என்பதை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து புவியியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வந்து பார்த்த பிறகு தான் கிணறு உள்வாங்கியதற்கானகாரணம் தெரியவரும். இனி அந்த கிணறு பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியுமா அல்லது அதை அப்படியே மூடிவிடலாமா என்பது புவியியல் வல்லுனர்கள் ஆய்வுக்கு பின்னர் தெரியவரும்.

Tags : Parappuram ,Ariyalur , Ariyalur, Parabharam, Drinking water well
× RELATED குடிநீர் வாரிய ஆபரேட்டர் கழுத்தை அறுத்து கொலை