இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணம்: ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, சாலையின் தரமும் காரணம்...உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய காரணம் ஹெல்மட் அணியாதது மட்டுமல்ல, மோசமான சாலைகளும் தான் காரணம்  என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட வாரியாக பதிவான விபத்து விபரம்  குறித்தும், ஹெல்மெட் அணியாததால் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு அக்டோபர் மாதம் நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரிவின்  உதவி ஐ.ஜி சாம்சன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் முழுதும் கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணியாத  காரணத்திற்காக 22.65 லட்சம் நபர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் நிலவரப்படி 43.31 லட்சம் பேர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு எண்ணிக்கை 20 லட்சம்  அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 91 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டது.

அதே போல கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை, ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆகவும், ஹெல்மெட்  அணியாமல் உயிரிழந்ததவர்கள் எண்ணிக்கை 4,337 ஆகவும் இருந்த நிலையில், 2019 ஆகஸ்ட்டை பொறுத்த வரை ஹெல்மெட் அணிந்து  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3376 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே போல, இருசக்கர வாகன விபத்தால் ஏற்பட்ட இறப்பு விகிதம் கடந்தாண்டு ஆகஸ்ட வரை 4,337 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட்  வரை 3677 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. தமிழக அரசின் அறிக்கையைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு  ஒத்திவைத்த நீதிபதிகள், ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்தவும் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல் படுத்த கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை  சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடப்பு ஆண்டில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று  விபத்துக்குள்ளாகி 3,535 பேர் பலியாகியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல என்றும், சாலையின்  தரமும், முறையாக பராமரிக்காததும் காரணம் எனத் தெரிவித்தனர். கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு  விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : motorcycle accident , Two-wheeler driver dies in motorcycle accident: Not wearing helmet
× RELATED பார்வை திறன் குன்றியவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து