×

தூத்துக்குடியில் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாததால் 4வது நாளாக மக்கள் தவிப்பு

தூத்துக்குடி: மழை ஓய்ந்தும் தூத்துக்குடியில் வெள்ளநீர் வடியாததால் 4வது நாளாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் 212 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 15ம்தேதி முதல்  பலத்த மழை பெய்து வருகிறது. பருவமழையும் புயல் மழையும் மாவட்டத்தை புரட்டிபோட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவை தாண்டி அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இந்த மழை ஒட்டுமொத்த மாவட்டத்தையும் துவம்சம்  செய்துள்ளது.  தூத்துக்குடியில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் 2500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மழையும் விட்டு விட்டு தொடர்வதால் தண்ணீர் வரத்து அதிகரித்து முக்கிய பல குடியிருப்பு பகுதிகள் தனித்தீவாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற பொதுமக்களும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் வெள்ள நீரை வெளியேற்றுவதில் தொடர்ந்து 4வது நாளாக சிரமம் ஏற்பட்டுள்ளது. எந்த பகுதிகளின் வழியாகவும் வெளியே வெள்ள நீரை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றிலும் தேங்கிய மழை நீரிலும், ஒர்க்‌ஷாப்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் 160க்கும் மேற்பட்ட கார்கள், டூவீலர்கள், ஆட்டோக்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. தூத்துக்குடி அத்திமரப்பட்டி உப்பாத்து ஓடையில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஓடையின் இருபுறமும் ஆர்ப்பரித்து தண்ணீர் சென்று, திருச்செந்தூர் ரோடு பாலம் வழியாக சென்று கடலில் வீணாக கலக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பருவமழை துவங்கி தற்போது வரையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் இதுவரையில் 352 வீடுகள் பகுதியளவிலும், 58 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 414 வீடுகள் இடிந்துள்ளன. இதற்கான நிவாரண தொகை வழங்குவதற்காக வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். ஆடு, மாடு உள்ளிட்ட 4 கால்நடைகள் பலியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக மழை மற்றும் பலத்த கடல் காற்று எச்சரிக்கை காரணமாக விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. பெரும்பாலான நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லவில்லை. மழையினால் பெரும்பாலான ரோடுகள் அரித்தும், அடித்தும் செல்லப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ரோடுகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலைகள் சேதம் குறித்து உடனடியாக கணக்கெடுக்க முடியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு அறவே மழை இல்லை. இதனால் வெள்ளநீர் வடியும் என குடியிருப்பு வாசிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழைக்கு மொத்தம் உள்ள 637 குளங்களில் 212 முழுஅளவில் நிரம்பியுள்ளன. 193 குளங்கள் 75% நிரம்பியுள்ளன. 91 குளங்கள் 50 முதல் 70% வரையில் நிரம்பியுள்ளன. 134 குளங்கள் சுமார் 50% வரையில் நிரம்பியுள்ளன. ஆனால் 7 குளங்கள் இன்னும் 25% அளவிற்கு கூட நிரம்பவில்லை.

ஆட்டோக்கள் வர மறுப்பு

தூத்துக்குடியில் ராஜீவ்நகர், மிகிலேசன் நகர், எஸ்பிஎம் நகர், முத்துகிருஷ்ணாநகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர், புஷ்பா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், ஆசிரியைகளை வழக்கமாக அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.

மோட்டார்களுக்கு தட்டுப்பாடு

வீடுகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்குள் புகுந்த மழை வெள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகளை எதிர்பார்க்காமல்  மக்கள் தாங்களே மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்து வெளியேற்றி வருகின்றனர். இதனால் வாடகைக்கு நீர் இறைக்கும் மோட்டார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வாடகை மோட்டார்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



Tags : Tuticorin , Thoothukudi, rain, flood water, people
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!