மழையால் ஊட்டியில் கடும் குளிர்: சுற்றுலாதலங்கள் வெறிச்சோடின

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், ஊட்டியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடின. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேக மூட்டம் காரணமாக ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோன்று கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வரும் நிலையில், குளிரும் அதிகரித்துள்ளது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 10 டிகிரி செல்சியசுமாக பதிவாகியிருந்தது. குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா தலங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். இதனால், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் மிக குறைந்த சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.

தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு: மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் குன்னூரில் முகாமிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் குன்னூரில் அதிகபட்சமாக 132 மி.மீ. மழை பெய்தது. இந்த மழையால் குன்னூர்-பர்லியார் சாலையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் பாறைகள் விழுந்துள்ளன. மரங்களும் விழுந்துள்ளன. இவைகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சாலையில் விழுந்த பாறைகள் அகற்றும், மண் சரிவுகள் அகற்றும் பணிகள் நேற்று இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. காட்டேரி பகுதியில் பால்கார லைன் என்ற இடத்தில் இரு வீடுகள் லேசாக சேதம் அடைந்தன. ஆனால், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. குன்னூர் அருகேயுள் காந்திபுரம் பகுதியில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், குன்னூர் - காட்டேரி சாலையிலும் அடிக்கடி போக்குவரத்து பாதித்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.

இரு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி அருகேயுள்ள காட்டேரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், சில இடங்களில் தண்ணீரில் காய்கறி பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் இரு நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதாலும், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிவாரண மையங்களும் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை குன்னூரில் 25 குடும்பங்கள் இரு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>