கடலூர் வெள்ளாற்றில் குப்பைகளை கொட்டியது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்: ஆட்சியர் உத்தரவு

கடலூர்: கடலூர் வெள்ளாற்றில் குப்பைகளை கொட்டியது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கழிவுகளை வெள்ளாற்றில் கொட்டிய வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள வெள்ளாற்றில் பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்ட சுற்றுவட்டார  பகுதி முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக  பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படையிலேயே திட்டக்குடி தொழுதூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் வெள்ளாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அச்சமயம் பொதுமக்களின் பார்வைக்கு முன்பே திட்டக்குடி  பேரூராட்சியினர், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த குப்பை கழிவுகளை வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் லாரி மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டினர். இச்சம்பவத்தை அருகிலிருந்த பலர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவிறக்கம் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் மாசடைவது மட்டுமின்றி, அத்தண்ணீரை உபயோகிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. ஆதலால் மாவட்ட நிர்வாகம் இத்தகைய செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கோரிக்கைவிடுத்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளாற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவது மக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்திய நிலையில், தண்ணீரை அசுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டதாக பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ பதிவானது மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் திட்டக்குடி பேரூராட்சி செயல் தலைவர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார். ஆற்றில் குப்பைகளை கொட்டுவது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>