×

இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 28 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சி மாநகரமும், கிழக்கே 28 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சை மாநகரமும் அமைந்துள்ளன. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக பூண்டி மாதா கோயில், கல்லணை, அகரப்பேட்டை, தோகூர் பகுதிகளுக்கும், திருச்சி, லால்குடியில் இருந்து செங்கிப்பட்டி, தஞ்சை, திருவையாறு பகுதிகளுக்கும், புதுக்கோட்டையில் இருந்து பூண்டிமாதா கோயிலுக்கும், கும்பகோணத்தில் இருந்து கல்லணை பகுதிகளுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் தற்போதுள்ள மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப நவீன வசதிகள் ஏதும் இல்லை. மேலும் உள்கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்களும் இப்பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதால் கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

திருச்சி மாவட்டம் செங்கரையூர்- தஞ்சை மாவட்டம் பூண்டி இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் ரூ.46 கோடியில் கட்டப்பட்டு 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதனால் திருக்காட்டுப்பள்ளிக்கு திருச்சி மாவட்ட மக்களின் வருகையும், பேருந்துகளும் அதிகரித்தது. காவிரி ஆற்றின் குறுக்கே பூண்டி- திருக்காட்டுப்பள்ளி சாலைகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் ரூ.19.15 கோடியில் கட்டப்பட்டு 2014ல் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து அதிகமானதால் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியிலும், பேருந்து நிலயத்திலும் ஏற்படும் இடநெருக்கடியில் தினசரி வாகனங்கள் சிக்கி பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டும் வருகிறது. பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்காரகூட போதுமான இருக்கைகள் கிடையாது. பேரூராட்சிக்கு வருமானம் வருவதால் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கடைகள் அமைப்பதற்கு விடப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு சுகாதாரமான கழிப்பிடங்கள் போதுமானதாக இல்லை. சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை.

திருக்காட்டுப்பள்ளி நகருக்குள் வராமல் வாகனங்கள் செல்ல சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று பழமார்நேரி சாலை காவிரி புதுப்பாலத்தில் இருந்து பூதலூர் சாலைக்கும், அங்கிருந்து கண்டியூர் சாலைக்கும் சுற்றுச்சாலை அமைக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நில எடுப்புக்கு அளவீடு பணிகள் நடந்தன. சாலை அமைக்கும் இடத்தில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு மாற்று இடம், நிலம் அளிப்பவர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. சுற்றுச்சாலைக்கு நில எடுப்பு செய்ய நில அளவு பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு சென்றார். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவில்லை. சுற்றுச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. சுற்றுச்சாலை திறக்கப்பட்டால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

தற்போது கல்லணை பாலத்தில் பேருந்துகள் செல்ல அனுமதியில்லை. எனவே கல்லணை சாலை- திருவானக்கோயில் சாலைகளை இணைக்கும் வகையில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் 1,052 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ.67 கோடியில் கட்ட 2013ல் அரசு அனுமதியளித்து. தற்போது பாலம் கட்டும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டால் திருச்சியில் இருந்து நேரடியாக கூடுதல் பேருந்துகள் திருக்காட்டுப்பள்ளி வழியாக இயக்கப்படும்.

இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு வாகனங்கள் சிக்கி தவிக்கும் நிலை தான் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்று புதுப்பாலத்துக்கு கிழக்கில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விரிவான பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி சட்டமன்றத்தில் பேசியும், கோரிக்கை மனுவை கலெக்டர் மூலமாக அரசுக்கு அனுப்பினார். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அங்கு புதிய, நவீன வசதிகளுடன் விரிவான பேருந்து நிலையம் கட்டப்பட்டால் போக்குவரத்தும் சீர்படும். போக்குவரத்து தடைகளும் நீங்கும். பயணிகளுக்கு உட்கார இடம், சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளும் கிடைக்கும். எனவே பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirukattupalli Bus Station ,location , Bus stand
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!