×

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறி உள்ளார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பை தெரிவித்தன. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு  கடும் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், மொழிப் பிரச்சினையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என கூறி இருந்தார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் அளித்தார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரஞ்சு, இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல , விருப்ப பாடம் தான். இந்தியை திணிக்க வில்லை, தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு. இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி, ஒரு உலக மொழி ஆகியவற்றில் பயிற்சி அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். மாணவர்களே விருப்ப பாடத்தை எழுதி கொடுத்து தேர்வு செய்கிறார்கள் என கூறினார்.


Tags : Mafa Pandiyarajan ,World Tamil Research Institute ,Tamil Research Institute , Many languages,Hindi,World Tamil Research InstituteMinister Mafa Pandiyarajan
× RELATED தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல்...