×

இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது: மக்களவையில் ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். தென் சீன கடல் பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, அடுத்ததாக இந்திய பெருங்கடல் பகுதியை குறிவைத்துள்ளது. இதற்கு இந்தியா பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. ஆனாலும், அவ்வப்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு அருகே அத்துமீறி நுழைந்து ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.

இதே போல், கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே சீன ஆராய்ச்சி கப்பல் ஒன்று அனுமதியின்றி நுழைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருப்பதை இந்திய கடற்படை ரோந்து கப்பல்கள் கண்டறிந்தன. சீனாவின் இச்செயல் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளுக்குப் புறம்பானது என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்; நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்காக சீன எல்லையில் சாலைகள், சுரங்கங்கள், ரெயில் பாதைகள் மற்றும் விமானநிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது. எல்லை தெளிவாக இல்லாததால் இருதரப்பும் எல்லை தாண்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன. எங்கள் படைகள் விழிப்புடன் இருப்பதாகவும், எல்லைகளை பாதுகாப்பதாகவும் நான் இங்கு உறுதியளிக்க விரும்புகிறேன். எங்கள் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை, இது குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.


Tags : China ,speech ,India ,Rajnath Singh ,Lok Sabha ,Border , India-China, Border Treaty, Violation, Rajnath Singh
× RELATED சொல்லிட்டாங்க…