×

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் தொடர் மழை: ஏரி மதகு உடைந்து 150 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கியது

வந்தவாசி: தொடர் மழை காரணமாக வந்தவாசி அருகே ஏரி மதகு திடீரென உடைந்து அருகில் பயிரிடப்பட்டிருந்த 150 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது. அதேபோல், செய்யாறு அருகே 6 வீடுகள் இடிந்து விழுந்தன. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. 250 ஏக்கர் பரப்பவளில் அமைந்துள்ள இந்த ஏரி மூலம் அருகில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக  வந்தவாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மீசநல்லூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் ஏரி  முழு கொள்ளளவு எட்டும் நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தெள்ளார் செல்லும் சாலையில் உள்ள ஏரி மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வெளியேறி, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, கத்திரிக்காய் உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமானது. தகவலறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், செய்யாறு சப்-கலெக்டர் விமலா, தாசில்தார் வாசுகி, பிடிஓக்கள் காந்திமதி, பரணிதரன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டனர்.

அப்போது பொதுமக்கள், மதகு பழுதடைந்துள்ளது குறித்து பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை. மதகு உடைந்ததால், ஏரியில் 6 மாத பாசனத்திற்கு பயன்படும் தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது. பயிர்கள் சேதமானது மட்டுமின்றி இந்த ஆண்டு பயிர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மதகு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். முன்னதாக, ஏரி மதகில் ஏற்பட்ட உடைப்பை தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. ஏரியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

அப்போது மாவட்ட ஊராக வளர்ச்சி திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, செய்யாறு சப்-கலெக்டர் விமலா, தாசில்தார்கள் வாசுகி, நரேந்திரன், பிடிஓ ஆர்.குப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் இருந்தனர். இதேபோல், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இத காரணமாக செய்யாறு தாலுகா, வடதண்டலம் கிராமத்தை சேர்ந்த அன்புமணி, கொருக்காத்தூர் கிராமம் கோபால், ஆக்கூர் கிராமம் தேவகி ஆகியோரது ஓட்டு வீடுகளும், பூங்கொடி, பச்சையப்பன் ஆகியோரது கூரை வீடுகளும் நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர். மேலும், நிவாரண உதவித்தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

இதேபோல், வெம்பாக்கம் தாலுகா, நாட்டேரி அடுத்த செய்யனூர் கிராமத்தில் வேலாயுதம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த தாசில்தார் முரளி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டடு நிவாரண உதவிகளை வழங்கினர்.

Tags : rainfall ,region ,Vandavasi ,Cheyyar ,Lake lake , Rain
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை