×

கரூர் டிஎன்பிஎல் ஆலை எதிரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது

கரூர்: கரூர் அருகே டிஎன்பிஎல் ஆலை எதிரே உள்ள துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகளூர் பகுதியில் டிஎன்பிஎல் ஆலை உள்ளது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆலையாக உள்ளது. இந்த ஆலையின் வெளிப்புற வளாகத்தில் துணை மின்நிலைய வளாகம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மூன்று டிரான்ஸ்பார்மர்களில் இருந்து கரூர், டிஎன்பிஎல் ஆலை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து புகளூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்ததால் கரூர் ஆத்தூர் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலிய வளாகத்தில் இருந்தும், திருச்செங்கோடு பகுதியில் இருந்தும் நவீன தீயணைப்பு கருவிகள் வரவழைக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டன. இதன் சேதமதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பிரதான டிரான்ஸ்பார்மர் எரிந்ததால் வேலாயுதம்பாளையம், புகளூர், இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Tags : Transformer ,Karur DNPL ,plant , Transformer
× RELATED பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி