×

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களை கொண்ட சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. திட்டமிட்ட உயரத்தில் பூமியை சுற்றிவந்த சந்திரயான் 2 விண்கலம் பூமியின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்ட விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் கலன் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது நிலவை சுற்றி வந்து மிக துல்லியமான படங்களை அனுப்பியது.

இந்தநிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விக்ரம் லேண்டரை செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை 1.30 மணி முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நொடிக்கு நொடி துல்லியமாக விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்போது நிலவின் தரைப்பகுதியிலிருந்து 2 கி.மீ உயரத்தில் விக்ரம் லேண்டர் இருந்தபோது லேண்டரில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த சிக்னல்  திடீரென தடைபட்டது. தொடர்ந்து லேண்டரின் சிக்னலை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர்.

ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டபடி தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.  விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோவிற்கு அமெரிக்காவின் நாசா உதவி செய்தது. இந்த நிலையில், செப்டம்பர் 10ம் தேதி விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. ஆனால், புகைப்படம் தெளிவாக இல்லாததால் லேண்டர் விழுந்த இடத்தை துல்லியமாக குறிப்பிடமுடியவில்லை. தொடர்ந்து, நாசாவின் ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து, லேண்டரை புகைப்படம் எடுக்க முயன்றது. ஆனால் தெளிவான புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களின் புகைப்படங்களை நாசா நேற்று வெளியிட்டது.

இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோவின் தலைவர் சிவன் இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது. இது குறித்து எங்கள் இணையப்பக்கத்தில் ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். வேண்டுமென்றால் நீங்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். செப்டம்பர் 10ம்தேதி ட்வீட் செய்துள்ள இஸ்ரோ விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கண்டறிந்துவிட்டது. ஆனால் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

Tags : ISRO ,Vikram Lander ,President ,Shiva , Chandrayaan-2, Vikram Lander, ISRO, Shivan
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு