வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, கூகுள் நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
கூகுள் நிறுவனம் தானியங்கி கார், வாழ்வியல் அறிவியல் என பல்வேறு சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கிய நிலையில், அத்தொழில்கள் அனைத்தும் அல்ஃபாபெட் என்ற ஒரே குடையின் கீழ் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது கூகுள் நிறுவனத்தை மட்டும் நிர்வகித்து வந்த சுந்தர் பிச்சை தற்போது அக்குழுமத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக இந்த அறிவிப்பினை வெளியிட்டனர். அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார் என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் தமிழர் ஒருவர் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.