×

பிஎம்சி வங்கி மோசடி 3 இயக்குநர்கள் கைது

மும்பை: மும்பையில் உள்ள பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி வங்கி) நிதி மோசடி தொடர்பாக, வங்கி இயக்குநர்கள் 3 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி வங்கி) 4,355 கோடி நிதி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த வங்கியில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தற்போதுதான் சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வங்கி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய வங்கி இயக்குநர்கள் ஜகதீஷ் மூக்கே, முகி பவிசி, திருப்தி பனே ஆகிய 3 பேரை நேற்றிரவு கைது செய்தனர்.

இவர்களில மூக்கே 2005 முதல் இந்த வங்கியின் இயக்குநராகவும், ஆடிட்டிங் குழு உறுப்பினராகவும் உள்ளார். பவிசி 2011 முதல் வங்கி இயக்குநராகவும், கடன் வழங்கல் குழு உறுப்பினராகவும் இருந்தவர். திருப்தி பனே கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரை கடன் மீட்பு குழு உறுப்பினராக இருந்துள்ளார். எச்டிஐஎல் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியதில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இந்த மோசடி வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Directors ,bank ,BMC , BMC bank, fraud, directors arrested
× RELATED கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன்,...