சிறப்பு மூன்று சக்கர நாற்காலி மூலம் மெரினாவை சுற்றி பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள்: 7 நாட்கள் பயன்படுத்தலாம்

சென்னை : உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மூன்று சக்கர நாற்காலி மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடற்கரையை சுற்றி பார்த்தனர். இந்த வசதி 7 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில்  மெரினா கடற்கரையில் “அனைவருக்குமான மெரினா கடற்கரை” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடற்கரைக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சக்கர நாற்காலிகள் மூலம் எளிதாக கடற்கரைக்கு சென்று கடல் அலைகளை அருகிலிருந்து கண்டுகளிக்க ஏதுவாக மணல் பரப்பில் 225 மீட்டர் நீளத்திற்கு  பாதை அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் இந்த சிறப்பு நாற்காலி மூலம் கடற்கரை அழைத்து செல்லப்பட்டு கடல்நீரில் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ், மாற்றுத்திறனாளிகளுக்கான வித்யாசாகர்  அறக்கட்டளையின் நிர்வாகிகள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி ஒரு வாரம் நடைமுறையில் இருக்கும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ₹8.8 லட்சம் மதிப்பில் மணல் பரப்பில் இயக்கும் 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் சென்னை மாநகராட்சியால் வாங்கப்பட்டுள்ளது.

Tags : marina ,three-wheeler ,Transparent , special ,three-wheeler, Transparent, children, marina
× RELATED குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து