×

திருவண்ணாமலையில் தொடர் கருக்கலைப்பு: போலி டாக்டர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: தேசிய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் இடம் பெற்றது. இதையடுத்து, அதிரடி சோதனை நடத்தி பெண் சிசுவை கண்டறிந்து தெரிவித்து வந்த ஸ்கேன் சென்டர்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் பிரமாண்ட சொகுசு பங்களாவில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் டாக்டர் ஆனந்தி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத ஆனந்தி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும், ஏற்கனவே 3 முறை கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து, ெதாடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

எனவே கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஆனந்தி சொத்துக்களை முடக்கி, சொகுசு பங்களாவுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார். பின்னர், ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி, மீண்டும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து தெரிவிப்பது, வெளி மாவட்டங்களுக்கு சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக இணை இயக்குநர் (நலப்பணிகள்) சுகந்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த மாதம் இணை இயக்குநர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவில் ஆனந்தி தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, ஆனந்தி மற்றும் அவரது உதவியாளர் நவீன்குமார்(20) ஆகிய இருவரும், சட்ட விரோதமாக கையடக்கமான நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்கேன் கருவி மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து தெரிவித்து வந்ததும், பெண் சிசுக்களை கருவில் அழிக்க ₹10 ஆயிரம் வசூலித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தி(51), உதவியாளர் நவீன்குமார்(20) ஆகிய இருவரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் ஆனந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் நவீன்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் 2வது முறையாக  கைது செய்ய  எஸ்பி சிபிசக்கரவர்த்தி, சிபாரிசின்படி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி  நேற்று உத்தரவிட்டார்.

Tags : Doctor ,Tiruvannamalai , Thiruvannamalai, Abortion, Fake Doctor, Thug Act, Arrested
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...