×

சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்து 17   பேர் பலியான சம்பவத்தில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.கோவை மேட்டுப்பாளையம் அருகே  நடூர் ஏ.டி.காலனியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் கனமழையால்  துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் 22 அடி உயர  காம்பவுண்ட் சுவர் இடிந்தது. அந்த சுவர் அருகிலுள்ள வீடுகளின் மீது  விழுந்தது. இதில் அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த இரு குடும்பத்ைத சேர்ந்த ஒட்டுமொத்தமாக 17 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.  துணிக்கடை உரிமையாளர்  சிவசுப்பிரமணியன், அஸ்திவாரம் சரியாக தோண்டாமல் பெரிய காம்பவுண்ட் சுவர்  அமைத்ததே விபத்துக்கு காரணம் எனவும், இதனை கட்டும்போதும், கட்டியபின்னரும்  எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும்  அதிகாரிகள் அலட்சியத்தால் தற்போது 17 பேர் பலியாகி உள்ளனர் என்றும் அவர்கள்  குற்றஞ்சாட்டினர். மேலும் சிவசுப்பிரமணியன் மீது உரிய நடவடிக்கை  எடுக்காதவரை உடல்களை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.  இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். போராட்டத்தில்  ஈடுபட்ட 24 பேரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து 16 பேரின் உடல்கள்  வேனில் ஏற்றப்பட்டு பத்ரகாளியம்மன் ரோட்டில் உள்ள கோவிந்தபிள்ளை  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டன.  புளியம்பட்டியை சேர்ந்த ருக்மணியின்சடலம் உறவினர்கள் வசம்  ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  துணிக்கடை உரிமையாளர்  சிவசுப்பிரமணியனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது விபத்து மற்றும்  அஜாக்கிரதை காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  வசுப்பிரமணியனின் மகன்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.சிறையில் அடைப்பு: போராட்டத்தில்  ஈடுபட்டு கைதான தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன்,  திராவிடர் தலைவர் கட்சி தலைவர் வெண்மணி, ஜாதி ஒழிப்பு விடுதலை முன்ணணி  நிர்வாகி ஹரிமன்னன் உட்பட 24 பேரும் நேற்று மதியம் மதுக்கரை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி ரேஹானா பேகம், வருகிற 17ம் தேதி வரை 15  நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 24 பேரும் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் கண்ணீர் அஞ்சலி
மேட்டுப்பாளையம் நகராட்சி நடூர் கிராமத்தில் 17 பேர் உயிரை பறிக்க காரணமாக இருந்த, காம்பவுண்ட் சுவரை அகற்றகோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் காவல்துறை, வருவாய்துறை என யாரும் அகற்ற முன்வரவில்லை. இந்த சம்பவத்தில் அதிகாரிகளின் மெத்தனத்தை அப்பகுதி மக்கள் கண்டித்து, மாலையில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சுவர் இடிந்து பலியான 17 பேரில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டீக்கடை தொழிலாளி செல்வன் (50) என்பவரது மகள் நிவேதிதா, மகன் ராமநாதன் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரது கண்களும் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து செல்வன் கூறுகையில், ‘நான், இங்குள்ள ஒரு டீக்கடையில் கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன். எனது மனைவி மாரியம்மாள் 5 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது மகள்கள், மகனை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், எனது குழந்தைகள் மண்ணில் புதைந்து கிடந்ததை பார்த்து எனது இதயம் நொறுங்கிவிட்டது. எனது குழந்தைகளின் கண்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். அதனால், என்னை விட்டு சென்றாலும், அவர்களது கண் இன்னொருவர் மூலமாக உயிர் வாழட்டும்’ என்று கூறினார்.

மனைவி, மகளை பறிகொடுத்தவர் கதறல்
மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஆதி திராவிடர் காலனியில் துணிக்கடை உரிமையாளர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சரிந்து வீடுகள் மீது விழுந்து 17 பேர் பரிதாபமாக இறந்தனர். பலியானவர்களில் ஒருவரான சிவகாமியின் கணவர் பழனிச்சாமி (52) மட்டும் உயிர் பிழைத்துள்ளார். கூலித்தொழிலாளியான பழனிச்சாமியின் மனைவியுடன் மகள் வைதேகி, அண்ணன் மகள் நிவேதா, மகன் ராமநாதன், பக்கத்து வீட்டுக்காரர் மங்கம்மாள் ஆகியோரும் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த அன்று இரவு பழனிச்சாமி அடுத்த தெருவில் உள்ள அவரது அண்ணன் செல்வராஜின் வீட்டில் தங்கியிருந்ததால் உயிர் தப்பினார். அதிகாலையில் அவரது வீட்டின் மீது சுவர் விழுந்து அமுக்கிய சம்பவம் குறித்து பழனிச்சாமியிடம் அவரது மகன் பிரதாப்பும், மருமகளும் அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர்.

பதறியடித்தபடி வந்த பழனிச்சாமி வீட்டின் இடிபாடுகளை தன் கையால் அகற்ற தொடங்கினார். மனைவி சிவகாமி, மகள் வைதேகியின் பெயர்களை உரக்க கத்தி சொன்னார். சத்தமிட்டு குரல் கொடுத்தவாறே தொடர்ந்து இடிபாடுகளை அகற்றினார். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பழனிச்சாமியின் மனைவி சிவகாமி, மகள் வைதேகி, அண்ணன் மகள் நிவேதா, மகன் ராமநாதன், பக்கத்து வீட்டுக்காரர் மங்கம்மாள் ஆகியோரது சடலங்களை மீட்டனர். மனைவி, மகள் சடலங்களை வெறித்தபடி பார்த்த பழனிச்சாமி கண்ணீர்விட்டு கதறி அழுதார். ஒட்டுமொத்த குடும்பத்தையும், இடிபாடுகளுக்குள் பறிகொடுத்துட்டு நான் மட்டும் ஏன் உயிரோடு இருக்கணும் என அவர் சொல்லி அழுதது பார்த்தவர்களை பரிதாபப்பட வைத்தது.

Tags : owner ,collapse ,clothing store ,cafe , 17 killed ,collapses, Arrested owner , cafe
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது