×

வயலில் விளைந்திருந்த வெங்காயம் வேரோடு கொள்ளை: 7 குவிண்டால் மாயமானதால் விவசாயி அதிர்ச்சி

மான்சூர்: வெங்காயம் விலை விண்ணை தொடும் அளவுக்கு அதிரடியாக உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுவதால் தற்போது சமையல் அறையில் வெங்காயத்தை பார்ப்பதே அரிதாகியுள்ளது. தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இப்போது பணம், நகைகளை கொள்ளையடிப்பதை விட வெங்காயத்தை கொள்ளையடிப்பது ‘டிரென்ட்’ ஆகியுள்ளது. கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை நாசிக்கில் இருந்து லாரியில் கொண்டு வந்தபோது, மர்ம கும்பல் நடுவழியில் கொள்ளையடித்து சென்றது. இந்நிலையில், மற்றொரு கொள்ளை சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்த மாநிலத்தின் மான்சூர் பகுதியில் உள்ள ரிச்சா பாச்சா கிராமத்தில் ஜிதேந்திரா குமார் என்ற விவசாயி தனது 1.6 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டிருந்தார்.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது நிலத்தில் புகுந்த கொள்ளை கும்பல், 7 குவிண்டால் வெங்காயத்தை வேரோடு கொள்ளையடித்து சென்றது. நேற்று காலை வயலுக்கு சென்ற ஜிதேந்திரா, தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக நாராயண்கார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதில் ரூ.30,000 மதிப்புள்ள வெங்காயத்தை வேரோடு அறுத்து மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த வயலை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Onion, spoil, 7 quintal magic, farmer
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...