×

திகார் சிறையில் உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு இம்மாதம் இறுதியில் தூக்கு: தண்டனையை நிறைவேற்ற ஆளின்றி தவிப்பு

புதுடெல்லி: டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும், இம்மாத இறுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் தண்டனை நிறைவேற்றும் காலம் நெருங்கி உள்ளது. இந்த 4 குற்றவாளிகளில் வினய் சர்மா மட்டும் கருணை மனு தாக்கல் செய்துள்ளான். இதனால், 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. வினய் சர்மாவின் கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை ஜனாதிபதியும் நிராகரிக்கும் பட்சத்தில், இவர்களை தூக்கில் போடுவதற்கான ‘பிளாக் வாரன்ட்’ எனப்படும், ‘தண்டனை நிறைவேற்றும் ஆணை’ பிறக்கப்படும். அதைத் தொடர்ந்து தூக்கில் போடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இன்னும் ஒரு மாதத்தில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட, அதற்கான பணியாளர் இல்லாமல் திகார் சிறை நிர்வாகம் தவிக்கிறது. இங்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியாக கடந்த 2013ல் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான். பொதுவாக, தூக்கு தண்டனை என்பது அரிதினும் அரிதாக வழங்கப்படும் தண்டனையாகும். எனவே, அந்த பணிக்காக எந்த சிறை நிர்வாகமும் நிரந்தர ஊழியரை வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்த  அடிப்படையில் பணியாளர் நியமிக்கப்படுவதே வழக்கம். இதனால், நாட்டின் வேறு எந்த சிறையிலாவது தூக்கிலிடும் பணியாளர் இருக்கிறாரா என திகார் சிறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். கடந்த முறை அப்சல் குருவை தூக்கில் போடுவதற்காக, உபி மாநிலத்தில் இருந்து பணியாளர் அழைத்து வரப்பட்டார்.  எனவே, அங்குள்ள கிராமங்களில் யாராவது இருக்கிறார்களா என சிறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


Tags : convicts ,death ,Tihar jail , Dikar Prison, Nirbhaya guilty, executioner
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...