பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து பலியான 17 பேரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு, அமைச்சர், அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி  நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில்  இருந்து விமானத்தில் கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் இருந்து  அன்னூர் வழியாக காரில் காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றார். அங்கு ஒரு மணி நேரம் முகாமிட்டு, வீடுகள் இடிந்த இடங்களை பார்ைவயிட்டார். பின்னர்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு  ஆறுதல் கூறினார். பிறகு, மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:-  கோவை மாவட்டம்  நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர்  இடிந்து   17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

சுவர் பழுதடைந்துள்ளது குறித்து  அப்பகுதி மக்கள் நகராட்சி  அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல  முறை புகார் மனு கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோய்  இருக்காது. அரசு, அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால்  17 பேர்  உயிரிழந்து  இருக்கின்றனர். இந்த குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்து கொள்கின்றேன்.
இறந்தவர்களின் உடலை திருட்டுத்தனமாக   பிரேத பரிசோதனை  செய்து, எரியூட்டி இருக்கின்றனர். இந்த உயிரிழப்புக்கு  காரணமாக, காம்பவுண்ட் சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளரை கைது செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள்   போராட்டம் நடத்தி  இருக்கின்றனர்.  பொதுமக்களும் இந்த போராட்டத்தை இணைந்து  நடத்தி இருக்கின்றனர். ஆனால், போராடியவர்களுக்கு நீதி வழங்காமல், அவர்களை,   காவல்துறையினர்  கண்மூடித்தனமாக தாக்கி  இருக்கின்றனர். இதில் பலர்  காயமுற்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்கள் மீது  கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை  அதிகாரிகள்  மீது நடவடிக்கை  எடுக்க  வேண்டும். காவல்துறையின் இச்செயல் வெட்கக்கேடானது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள  ₹4 லட்சம் இழப்பீடு  போதுமானதல்ல. இதை, இன்னும் அதிகப்படுத்தி  தர  வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு  வழங்க வேண்டும். இடிந்த வீடுகளை மீண்டும் கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.  நீலகிரி  எம்.பி. ஆ.ராசா, முன்னாள்  அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்ட ெசயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கலெக்டருக்கு செல்போனில் வலியுறுத்தல்
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் ெசல்போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ‘’17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த துணிக்கடை உரிமையாளரை இன்னும் ஏன் கைது செய்யாமல் உள்ளீர்கள்? சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என  வலியுறுத்தினார். இதற்கு கலெக்டர் ராஜாமணி, ‘’சம்பந்தப்பட்டவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.

Tags : ministers ,government ,deaths , MK Stalin, Government, Minister, Officials
× RELATED அதிகாரிகளின் அலட்சியத்தால் தடை...