×

போலீஸ் தேர்வில் 3 திருநங்கைகளை அனுமதிக்காவிட்டால் தேர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படும்: தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை:  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் குரூப் 12 கான்ஸ்டபிள் வேலைக்கு கடந்த மாதம் 18ம் தேதி உடல் தகுதி தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிடக்கோரி எழுத்து தேர்வில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த சாரதா, தேன்மொழி, சென்னையை சேர்ந்த தீபிகா ஆகிய 3 திருநங்கைகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நவம்பர் 18ந்தேதி நடைபெற உள்ள உடல் தகுதி தேர்வில் மனுதாரர்கள் 3 பேரையும் சீருடை பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்க வேண்டும். முடிவை சீலிட்ட உறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.  இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அமல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

 அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இந்த உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்துள்ளது. திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட திருத்தமோ அல்லது அறிவிப்பாணையோ வராத நிலையில் மனுதாரர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதி கோர முடியாது என்று வாதிட்டார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ மற்ற வழக்குகளை பார்க்கிற மாதிரி இந்த வழக்கை பார்க்க முடியாது. இந்த வழக்கு முக்கியமான வழக்காகும். ஆனால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, நீதிமன்றத்தின் உத்தரவை டிசம்பர் 5ம் தேதிக்குள் அமல்படுத்தி 6ம் தேதி அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 கான்ஸ்டபில் தேர்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க நேரிடும்” என்று உத்தரவிட்டார்.

Tags : court ,proceedings ,police examination ,Supreme Court ,persons , Police selection, 3 transgender people, transgender, high court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...