×

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

* ஏரிகள் உடைப்பால் கிராமங்கள் பாதிப்பு
* பல இடங்களில் மக்கள் சாலை மறியல்
* வெள்ளத்தில் குடியிருப்புகள் தத்தளிப்பு
* மேலும் 3 நாட்கள் கனமழை நீடிக்கும்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டி வருவதால் டெல்டா மாற்றும் தென் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நெல், வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. பல கோடி ரூபாய்  சேதத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதோடு, உடையும் நிலையில் உள்ள ஏரிகள், குளங்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த முறை மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இன்னும் மூன்று நாள் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அதிக அளவில் மழை கொட்டி வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், அணைகள் நிரம்பி விட்டன. பல இடங்களில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மழை நீர் மற்றும் ஏரி, குளங்கள், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகியுள்ளன.  பல இடங்களில் ஏரிகள் உடைந்ததால், வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல் செய்தனர் மக்கள். திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தென் மாவட்டங்களில் மக்கள் ஆங்காங்கு மறியல் ெசய்தனர்.

 சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழையினால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாம்பரம், சேலையூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து தேங்கியுள்ளன. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் நெற் பயிர்கள் நாசமடைந்தள்ளன.மேலும், டெல்டா மாவட்டங்களில் 6வது நாளாக நேற்றும் அதிகாலையில் இருந்தே பரவலாக மழை பெய்தது. இதனால் டெல்டா முழுவதும் எங்கும் வெள்ளமாக இருப்பதால் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. பல நூறு ஏக்கர் வாழை, தென்னை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை நீடித்தால் பயிர்கள் முழுவதும் அழுகி விடும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கும்பகோணம் அருகே கரிச்சம்பாடியில் 100 ஏக்கரில் கருணை கிழங்கு பயிர்கள் சாய்ந்து விட்டன. இதனால் செடிகள் அழுகிவிடும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திருவண்ணாமலைமாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இதன்மூலம் அருகில் உள்ள 300 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தொடர்மழையினால் பெரிய ஏரி முழு கொள்ளளவு எட்ட இருந்தது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தெள்ளார் செல்லும் சாலையில் உள்ள ஏரி மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வெளியேறி, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதேபோல், செய்யாறு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வேடநத்தம், வெங்கடாசலபுரம், வள்ளிநாயகிபுரம், கொல்லம்பரம்பு, முள்ளூர், த.சுப்பையாபுரம், முத்துக்குமாரபுரம், வீரபாண்டியாபுரம், பனையூர், வேப்பலோடை, தருவைகுளம், வைப்பார், சூரங்குடி, வேம்பார், பூசனூர், புளியங்குளம், கெச்சலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, கம்பு, சோளம், மிளகாய் சாகுபடி செய்த விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதி வளர்ச்சியடைந்த பயிர்கள் அழுகும் நிலைக்குள்ளாகி வருகின்றன. நாசரேத் வட்டாரத்தில் பெய்த தொடர் மழையால் பல ஏரி , குளங்கள் உடையும் அபாயம் நிலவுகிறது. கடம்பாகுளம் உடைந்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து போலீசார் பொதுமக்களுடன் இணைந்து குளங்களில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது நாளாக நேற்றும் கனமழை நீடித்ததால் பல்வேறு இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டினம் கிராமத்தில் தெருக்களிலும், விளைநிலங்களிலும், வடிகால்கள் மூலமாக தண்ணீர் வெளியேற முடியாததால் வீடுகள், குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதற்கு ஆக்கிரமிப்பே காரணம் எனக்கோரி சவேரியார்பட்டினம் மக்கள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 மாவட்டத்துக்கு எச்சரிக்கை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் தற்போது 66 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 8 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 360 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ளவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மஞ்சளாறு அணையில் 55 அடிக்கு நீர் நிரம்பியுள்ளதையடுத்து, மஞ்சளாறு கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 கிராமங்கள் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு மண்டகப்பட்டு கிராமங்களுக்கு இடையில் ஓங்கூர் ஆற்றில் உள்ளது தரைப்பாலம். இந்த பாலம் ஆற்றின் குறுக்கே தாழ்வாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளம் கரையுரண்டு ஓடுகிறது. இதன் காரனமாக பாலம் முற்றிலும் நீரில் மூழ்கிவிட்டது. அதிகப்படியான தண்ணீர் பாலத்தில் செல்வதால் பாலம் எந்த நேரத்திலும் உடையும் அபாய நிலை உள்ளது. இதனால், காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ளகொண்ட அகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஈரோடு  மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் ஏரிக்கு வரட்டுப்பள்ளம்  அணையில் இருந்து வரும் உபரி நீர் செல்லும் வழிப்பாதை பொதுப்பணித்துறையினர்  தடுத்து ஆப்பக்கூடல் ஏரிக்கு திருப்பி விடப்பட்டதாக விவசாயிகள் மத்தியில்  புகார் எழுந்தது. இதன்காரணமாக சந்தியபாளையத்தை சேர்ந்த 100 விவசாயிகள்  அண்ணாமடுவு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பவானி கரையோரத்தில் விடிய, விடிய தவிப்பு
ஈரோடு  மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை  எட்டியதால் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.  பவானி நகரின் கரையோர பகுதிகளான சோமசுந்தரபுரம், பழனிபுரம் தெரு, சீனிவாசபுரம், மெக்கான் வீதி, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கரையோர  வீடுகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள வீடுகளில்  தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

Tags : Rainfall ,Tamil Nadu ,Nadu Tens , torrential rain , Tamil Nadu,crops ,ruined
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...