×

அம்பத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அச்சுறுத்தும் நாய்கள் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையத்தில் நாய்கள், மாடுகள் சுற்றித்திரிவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு தினமும் 300க்கு மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்த பஸ் நிலையத்தில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதில், சில மாடுகள் பயணிகளை முட்டுகின்றன. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இவை இருக்கை பகுதி மற்றும் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களிலும் ஆங்காங்கே சாணத்தை போட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாத நிலை உள்ளது.

இதுஒருபுறம் இருக்க நாய்களும் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. இவைகள், பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள துரித உணவகங்களில் உள்ள இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு, பஸ் நிலையதில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. சில நாய்கள் பயணிகளை விரட்டி கடிக்கின்றன. இதனால் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி பஸ் நிலையத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பயணிகள் பலமுறை அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், தினமும் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகள் நாய் மற்றும் மாடுகளின் தொல்லையால் அவதிப்படுகின்றனர். எனவே, அம்பத்தூர் மண்டல நிர்வாகம் கவனித்து அம்பத்தூர் பஸ் நிலையத்தில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Travelers ,bus station ,Ambattur , Travelers threatening dogs,Ambattur bus station
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...