×

சொத்துவரி மற்றும் கொசு உற்பத்திற்கு அபராதம் திறந்தவெளி இடங்களை பற்றிய தகவல் சேகரிக்கும் மாநகராட்சி

சென்னை: சொத்துவரி கட்டாமல் இருப்பது மற்றும் கொசு உற்பத்திக்கு காரணமான இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் திறந்தவெளி இடங்களை பற்றிய தகவல்களை சென்னை மாநகராட்சி சேகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் 12 லட்சம் கட்டிடங்களுக்கு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்தவெளி இடங்களுக்கும் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. இதன்படி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறந்தவெளி இடங்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50 பைசா வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஓர் அரையாண்டுக்கு மாநகராட்சிக்கு ரூ.5 கோடி வருமானம் கிடைக்கிறது. மழைக்காலங்களில் இந்த இடங்களில் பலர் குப்பை கழிவுகளை கொட்டி விட்டு சென்றுவிடுகின்றனர். மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. இதனை தடுக்க கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள காலியிடங்களை அதன் உரிமையாளரே  சுத்தப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

நில உரிமையாளர்கள் சுத்தப்படுத்தாவிட்டால் மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தி அதற்கு வழக்கமாக மாநகராட்சி தரப்பில் வசூலிக்கப்படுவதை விட 2 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த சொத்துவரி வசூலிக்கவும், கொசு உற்பத்திக்கு அபராதம் விதிக்கவும் திறந்தவெளி நிலங்கள் தொடர்பான தகவலை சேகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, திடக்கழிவு மேலாண்மைத் துறை தலைைம ெபாறியாளர் மகேசன், கணினி மைய முதுநிலை மேலாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 முதல் 25 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. நிலத்தின் உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மழைக்காலங்களில் கொசு உற்பத்தியானால் அதற்கான அபராதத்தை வசூலிக்க முடியவில்லை. எனவே திறந்த வெளி இடங்கள் தொடர்பான தகவலை முழுமையாக கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Corporation ,spaces ,Open Space on Collecting Information for Corporation , Corporation for collecting,open spaces, fines for mosquito
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை