×

கால்வாய் அடைப்பை அதிகாரிகள் திறந்ததால் கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கழிவுநீர் புகுந்தது : பொதுமக்கள் சாலை மறியல்

அம்பத்தூர்: கால்வாய் அடைப்பை அதிகாரிகள் திறந்ததால் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கழிவுநீர் புகுந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 தினங்களாக மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் ஆறாக ஓடியது. குறிப்பாக அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியான சென்ட்ரல் அவன்யூ, வடக்கு அவன்யூ, 27 முதல் 29 தெருக்கள், கண்ணகி தெரு, தெற்கு ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முறையாக கட்டப்படாத மழைநீர் வடிகாலில் இருந்து தண்ணீர் வீடு மற்றும் தெருக்களுக்குள் புகுந்தது. பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றினர். இந்நிலையில் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கால்வாயை நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென திறந்துவிட்டனர். இதனால் அதிக வேகத்துடன் வெளியேறிய கழிவுநீர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்தது.

இதனால்  49 முதல் 54 வரையிலான தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதனையடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால்,  கால்வாயை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தண்ணீர் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 6 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரட்டூர் பிரதான சாலையில்  மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கால்வாயை மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கால்வாயை அடைத்து கழிவுநீரை அகற்றும் பணியில் நடந்தது.



Tags : Korattur Housing Board Residence Korattur Housing Board Residence , Sewerage, Korattur Housing Board Residence
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...