×

சவுகார்பேட்டையில் வாடகை செலுத்தாத கட்டிடத்திற்கு சீல் : அறநிலையத்துறை நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் வாடகை பாக்கி செலுத்தாத கட்டிடத்திற்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.  சவுகார்பேட்டை வள்ளியம்மன் கோயில் தெருவில் 300 ஆண்டுகள் பழமையான அருணாச்சலேஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ளன.  அதன்படி, சவுகார்பேட்டை தங்க சாலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 472 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தில் தனிநபர் ஒருவர் இனிப்பு கடைகளுக்கு, பொருட்கள் தயாரிப்பதற்காக கோயிலிடம் வாடகைக்கு எடுத்து, அதில் 3 மாடிக் கட்டிடம் கட்டி இனிப்பு வகைகள் தயாரித்து வந்தார். இந்த நிலையில், இந்த இடத்திற்கு பல வருடங்களாக வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. கோயில் நிர்வாகம் வாடகை செலுத்த கோரி பலமுறை அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தும் அவர் வாடகை பாக்கியை செலுத்தவில்லை, என கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து வாடகை செலுத்தாத கட்டிடத்திற்கு சீல் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவெனிதா, கோயில் செயல் அலுவலர் ராதாமணி ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று கொத்தவால்சாவடி போலீசார் பாதுகாப்புடன் மேற்கண்ட இடத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்தவர்களை  வெளியேற்றிவிட்டு, அந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.  இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்ட இந்த இடத்தில் மதிப்பு பல கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sealing ,building ,Southcarpet: Charity Department , Sealed off, rent-free building ,Southcarpet
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...