×

மாநிலங்களவையில் காங். வெளிநடப்பு எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையைத் தெடர்ந்து மாநிலங்களவையிலும், சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் குடும்பத்தினர்களான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரின் எஸ்பிஜி பாதுகாப்பையும் மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, இனி பிரதமர் ஒருவருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர்களுக்கு 5 ஆண்டுகள் வரை இப்பாதுகாப்பு தரப்படும் என்றும் பிரதமருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுமெனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து எஸ்பிஜி சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷ்ண் ரெட்டி மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் எம்பி கே.கே.ராகேஷ் பேசுகையில், ‘‘இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருவதில் அரசின் உள்நோக்கம் என்ன? பிரதமர் கூட பலமுறை எஸ்பிஜி பாதுகாப்பு விதிமுறைகளை மீறியிருக்கிறார். அப்போதெல்லாம் அது ஹீரோயிசமாக பார்க்கப்பட்டது. ஆனால் மற்றவர்கள் செய்தால் அவமதிப்பா?’’ என கேள்வி எழுப்பினார். திமுக எம்பி பி.வில்சன் பேசுகையில், ‘‘முக்கிய தலைவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு செலவு கணக்கை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது. ஒரு சில லட்சங்களுக்காக தலைவர்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யலாமா? நாளை நீங்களும் எதிர்க்கட்சி வரிசையில் வருவீர்கள். அப்படியிருக்க, பாதுகாப்பு அச்சுறுத்தல் 5 ஆண்டு வரை மட்டும்தான் என எப்படி நிர்ணயிக்கலாம்?’’ என்றார்.

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:பிரதமரைக் காட்டிலும் அதிகமான அச்சுறுத்தல் நாட்டின் எந்த குடிமகனுக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக எல்லோருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு தரமுடியுமா? சிறப்பு பாதுகாப்பு என்பது பிரதமர் ஒருவருக்கு மட்டும்தான். பாதுகாப்பு என்பது ஒரு குடும்பத்திற்கானது மட்டுமல்ல. இது அரசியல் பழிவாங்கல் என்று கூற காங்கிரசுக்கோ, இடதுசாரிகளுக்கோ எந்த அருகதையும் இல்லை என்றார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்ய, மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிரியங்கா வீட்டில் நடந்தது என்ன?


காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வீட்டுக்குள் அடையாளம் தெரியாத 7 பேர் நுழைந்ததாகவும், அவர்கள் பிரியங்காவுடன் செல்பீ எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இது பாதுகாப்பு குறைபாடு என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இது குறித்து மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி, ‘‘முழு பாதுகாப்பு இருந்திருந்தால் எப்படி 7 பேர் உள்ளே நுழைந்திருக்க முடியும்?’’ என கேள்வி எழுப்பினார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அளித்த விளக்கத்தில், ‘‘கடந்த 25ம் தேதி பிரியங்கா வீட்டிற்கு ராகுல் காந்தி கறுப்பு நிற காரில் வர இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக அந்த நேரத்தில் கறுப்பு நிற காரில் வேறு சிலர் வந்துள்ளனர். அது ராகுலின் கார் என நினைத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் சோதனை நடத்தாமல் விட்டுள்ளனர். இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தீவிர விசாரணையும் நடந்து வருகிறது’’ என்றார்.

Tags : states ,Parliament States ,Parliament , Cong in the states, SPG Law Amendment, Bill passed in Parliament
× RELATED காங். சார்பில் ஏர் கலப்பை யாத்திரை