×

சப்பாத்திக்கு உப்பு, லிட்டர் பாலுக்கு பக்கெட் தண்ணீர் வரிசையில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் இறந்த எலி

லக்னோ: உபி.யில் பள்ளியில் வழங்கிய உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. 1.5 லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகின்றது. இதன் மூலம், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக மதிய உணவு குறித்த பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை உத்தரப்பிரதேச அரசு சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து, சப்பாத்திக்கு உப்பை தொட்டு சாப்பிட்ட வீடியோ வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் சோன்பத்ரா மாவட்டத்தில் மதிய உணவு தயாரிக்கும் சமையலறையில் ஒரு லிட்டர் பாலை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

வரிசையில் டம்ளருடன் நிற்கும் மாணவர்களுக்கு, இந்த தண்ணீர் கலந்த பால் அரை டம்ளர் வழங்கப்பட்டதும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்து போன எலி இருந்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை ஹபூரில் உள்ள ஜன் கல்யாண் சன்ஸ்தா கமிட்டி என்ற தனியார் தொண்டு நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. மாணவர்கள் பாத்திரத்தில் இருந்து பருப்பு கூட்டை எடுக்கும்போது அதில் எலி இறந்து கிடந்துள்ளது. இது தெரியாமல் இந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : lunch ,government school pupils ,bucket water line ,Rat , Rat who died, lunch of government school, bucket water line , salty, liter milk
× RELATED பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடி வாக்குறுதி