×

கொடி, பாஸ்போர்ட்டுடன் தனி நாடு உருவாக்கிய நித்தியானந்தா

புதுடெல்லி: தனிக்கொடி, பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டுக்குரிய அனைத்து அம்சங்களுடன் சாமியார் நித்தியானந்தா புதிதாக தனிநாட்டை உருவாக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காகத்தான் அவர் அடிக்கடி வெளிநாடு சென்றார் என்று தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் சாதாரண குடிசையில் ஜோசியராக இருந்தவர் நித்தியானந்தா. அவரது உரை மற்றும் ஆன்மிக வழியால் ஈர்க்கப்பட்ட பெரும் பணக்காரர்கள், அவருக்காக சொத்துக்களை எழுதி வைக்க ஆரம்பித்தனர். இதில் நித்தியானந்தா காஸ்ட்லி சாமியார் ஆகிவிட்டார். பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் நாட்டின் பல இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். தற்போது இவரது ஆசிரமத்தின் கிளைகள் வெளிநாடுகளிலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அது அடங்கிப்போனது. தற்போது மீண்டும் அவர் மீது பல்வேறு புகார்கள் கிளம்பி உள்ளன. அவரது ஆசிரமம் மீது குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, பிடதி ஆசிரமத்தில் 2 நாட்கள் சோதனையும் நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. அவரை தாங்கள் தேடி வருவதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஒரு நாட்டை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் தனி கொடி, பாஸ்போர்ட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய நாட்டிற்கு ‘நித்தியானந்தா கைலாஷா’ என்று நித்தியானந்தா பெயர் வைத்துள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே, அவர் வாங்கியுள்ள தீவை தான் தனிநாடாக ஆக்கி உள்ளார். இதை வாடிகனை போன்று குட்டிநாடாக ஆக்குவதற்காக முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மேலும், எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பிரசங்கத்தில் இந்த தனிநாடு குறித்து அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரசங்கத்தில் அவர் கூறுகையில், ‘‘தனிநாடு இணையதளத்தில்  இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம். கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 10 கோடி. இந்த நாட்டுக்கு பாஸ்போர்ட், மொழி ஆகியவையும் உள்ளன. மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளேன். இதன் பிரதமராக நான் இருப்பேன்’’ என்று கூறியுள்ளார். கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன. இதில் பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்களும் உள்ளனர். இந்த தனிநாட்டிற்கு உரிய அந்தஸ்து கிடைப்பதற்காக ஐ.நா. சபையை நாடவும் நித்தியானந்தா முடிவு செய்துள்ளார்.

2 நிறங்களில் பாஸ்போர்ட்

கைலாசா நாட்டிற்கு 2 நிறங்களில் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தங்கம் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இந்த நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். கைலாசாவை சட்ட ரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தும் சட்டப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

Tags : Nityananda ,country , Nityananda,flag and passport
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...