×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வெங்காய விலையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு

* காங். அவைத் தலைவருக்கு எதிராக பாஜ அமளி

புதுடெல்லி: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பின. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் மார்க்சிஸ்ட் எம்பி கே.கே.ராகேஷ் பேசுகையில், ‘‘பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதத்தில் வெங்காய விலை அதிகரிப்பது வழக்கமானது. ஆனால், அது தெரிந்திருந்தும் மத்திய அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது துரதிஷ்டவசமானது. 32 ஆயிரம் டன் வெங்காயத்தை குடோன்களில் பதுக்கப்பட்டிருப்பதாகவும், அவை சந்தைக்கு கொண்டு வரப்பட்டால் விலை குறையும் என அரசே கூறியிருக்கிறது. இந்த விஷயத்தில் விலையை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பது அதிருப்தி அளிக்கிறது’’ என்றார்.

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் அவைத்தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை விண்ணை முட்டுகிறது. கிலோ ரூ.67க்கு மத்திய அரசு இறக்குமதி செய்யும் வெங்காயம், மார்க்கெட்டில் ரூ.130, ரூ.140 என விற்கப்படுகிறது. ‘நான் ஊழல் செய்ய மாட்டேன், ஊழலை பார்த்துக் கொண்டும் இருக்க மாட்டேன்’ என கூறுபவர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்’’ என்றார். உடனே மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குறுக்கிட்டு, ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா பற்றி காங்கிரஸ் அவைத்தலைவர் கூறிய கருத்துக்கு முதலில் அவர் மன்னிப்பு கேட்ட பிறகு அவரை பேச அனுமதிக்க வேண்டும்,’’ என்றார்.

பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என அதிர் ரஞ்சன் நேற்று முன்தினம் மக்களவையில் பேசியிருந்தார். அதே போல, வரி திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ‘நிர்பாலா’ (பலவீனமானவர்) என குறிப்பிட்டார். இந்த பேச்சுக்களுக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டுமென பாஜ எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாஜ பெண் எம்பி பூனம் மகாஜன், ‘‘பெண் நிதி அமைச்சரை காங்கிரஸ் அவைத் தலைவர் பலவீனமானவர் என கூறியது கண்டனத்துக்குரியது. பலவீனத்திற்கு உதாரணம் காங்கிரஸ் கட்சிதான்’’ என கடுமையாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், உண்மையான சமூக பிரச்னையை பற்றி பேசாமல், சம்பந்தமில்லாத பிரச்னையை கிளப்பி கவனத்தை திசை திருப்ப பாஜ முயல்கிறது என குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர்.

ஒரே ரேஷன் அட்டை 2020 ஜூனில் அமல்


நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் 2020ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வேலைக்காக பிற ஊர்களில் குடியேறிய தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் அதிகளவில் பயன்பெறுவர். ஒரே ரேஷன் அட்டை வந்த பின் எந்த நியாய விலைக்கடைகளிலும் பொருட்களை வாங்கலாம். ஆதார் எண் மூலமாக பயனாளிகள் அடையாளம் காணப்படுவர். இதற்காக அனைத்து நியாய விலைக்கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும்’’ என்றார்.

இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு

வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுவரை சில்லரை வியாபாரிகள் 10 டன்னும், மொத்த வியாபாரிகள் 50 டன்னும் வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில், இதை முறையே 5 மற்றும் 25 டன்னாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : government ,Parliament , government, without regulating , prices of onions
× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு...