காஸ் சிலிண்டர் விலை 18 உயர்வு

* சென்னையில் 714 ஆக நிர்ணயம்

* வர்த்தக சிலிண்டர் 14 அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை சென்னையில் 18 அதிகரித்து 714 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் 14 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் உள்ள விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 3 மாதமாக தொடர்ந்து சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

 நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் (14.2 கிலோ) மானியத்துடன் வழங்கப்படுகிறது. மானியம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதன்பிறகு சந்தை விலையில் வாங்க வேண்டும். இந்த மாதத்துக்கான மானியமற்ற சிலிண்டர் விலை சென்னையில் 714 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதத்தை விட 18 ரூபாய் அதிகம். இதுபோல் சேலத்தில் மானியமற்ற சிலிண்டர் விலை 17.50 உயர்த்தப்பட்டு, 732 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மானியமற்ற சிலிண்டர் டெல்லியில் 13.50 உயர்ந்து 695 ஆகவும், மும்பையில் 14 உயர்ந்து 665 ஆகவும், பெங்களூருவில் 697.50ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும். ஓட்டல், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கு மானியம் கிடையாது. இந்த சிலிண்டர் சேலத்தில் கடந்த மாதம் 1,283 ஆக இருந்தது. அது தற்போது 14.50 அதிகரித்து, 1,297.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 உயர்த்தப்பட்டு 1,333 ஆகவும், டெல்லியில் 7.50 உயர்த்தப்பட்டு 1,211.50 ஆகவும், மும்பையில் ₹9 உயர்த்தப்பட்டு 1,160.50 ஆகவும், பெங்களூருவில் 1,269 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்வால் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>