இந்திய அஞ்சல் துறையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் முதல் இடம்: ரூ.3,666 கோடி டெபாசிட்

சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ்  தமிழ்நாடு அஞ்சல் துறையில் ரூ.3,666 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக ‘சுகன்யா  சம்ரிதி யோஜனா’ (செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்) என்ற சிறு சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில்  அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இந்த கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.1,000, அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்  டெபாசிட் செய்ய முடியும்.

இத்திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் அதிகமானோர் இத்திட்டன் கீழ் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்திய அஞ்சல் துறையிலேயே  இத்திட்டத்தில் தமிழகம் 18 லட்சத்து 71 ஆயிரத்து 485 கணக்குகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2ம் இடத்திலும், கர்நாடகா 3ம் இடத்திலும் உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை இயக்குநர் எச்.ஆர்.வீராண கவுட் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தான் இத்திட்டத்தில் அதிக கணக்குகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 18  லட்சத்து 71 ஆயிரத்து 485 கணக்குகள் உள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 31.10.2019 வரை ரூ.3,666 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடுத்த படியாக உத்திர பிரதேசம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 16 லட்சத்து 64 ஆயிரத்து 649 கணக்குகள் உள்ளது. 3ம் இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு, 13 லட்சத்து 98 ஆயிரத்து 411 கணக்குகள் உள்ளது. தமிழ்நாடு அஞ்சல்  வட்டத்தில் 12 ஆயிரத்து 138 அஞ்சலகங்களில் இத்திட்டம் உள்ளது. கடந்த 1.4.2019 முதல் 18.11.2019 வரையில் அதாவது 8 மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 253 கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கணக்குகள்  கொண்ட மண்டலத்தில் கோவை மண்டலம் முதல் இடத்திலும், 2ம் இடத்தில் சென்னை மண்டலமும், 3ம் இடத்தில் திருச்சி மண்டலமும் உள்ளது. குறிப்பாக, 2017-18ம் நிதி ஆண்டில் 15 லட்சத்து 23 ஆயிரத்து 261 கணக்குகளை தமிழ்நாடு  அஞ்சல் வட்டம் தொடங்கியது.

இதன்மூலம், டெல்லியில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தில் அதிக கணக்கு தொடங்கியதில் முதல் பரிசை தமிழ்நாடு பெற்றுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு அடுத்தபடியாக இந்த திட்டத்தில் தான் 8.4 சதவீதம் வட்டி  கொடுக்கப்படுகிறது. அந்தந்த வருடத்திற்கான வட்டி விகிதத்திற்கு ஏற்ப முதிர்வு தொகை கணக்கிடப்படும். இதேபோல், பள்ளிகளிலும், கிராமங்களிலும் இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.

மாதம் தோறும் 364 சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முகாமில் இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், வரும் 2020 மார்ச் மாதத்திற்குள் 6.60 லட்சம் பேரை இத்திட்டன் கீழ்  சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு இந்திய அஞ்சல் துறை இணையதள பக்கத்தை காணலாம் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘postinfo’ என்ற செல்போன் செயலியை டவுன்லோட்  செய்துகொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 10 வயதுக்கு உட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவது தான் எங்களின் முழுமையான இலக்கு. இவ்வாறு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை இயக்குநர்  எச்.ஆர்.வீராண கவுட் கூறினார்.

Tags : Tamil Nadu ,India , Tamil Nadu tops first list of wealth savings plans in India
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...