×

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற மனநோயாளிக்கு குடும்ப கட்டுப்பாடு: குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் கொடூரம்: டாக்டர் மீது நடவடிக்கை கோரி மறியல்

குளித்தலை: வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற  சென்ற மன நோயாளிக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் இந்த கொடூரம் நடந்தது. இதற்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை நாபாளையத்தை சேர்ந்தவர் சத்யன்(50). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணம் ஆகாதவர். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாலை வரை   வீடு திரும்ப வரவில்லை. இந்நிலையில் நேற்று மாலை கையில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் கட்டு போட்டவாறு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது உறவினர்கள் எங்கே சென்றாய்? என்று கேட்டதற்கு குளித்தலைஅரசு மருத்துவமனைக்கு வயிற்று வலி என சென்றேன். அங்கு எனக்கு ஊசி போட கூட்டி சென்றனர். பின்னர் மயக்கமடைந்த நான் விழித்து எழுந்ததும் ஆயிரம் ரூபாய்  பணம் கொடுத்து அனுப்பி விட்டனர் என்றார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது சத்யனுக்கு ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துள்ளது தெரிய வந்தது. இதை அறிந்த உறவினர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த டிஎஸ்பி கும்மராஜா சம்பவ இடத்திற்கு  வந்து  மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த  மருத்துவ குழுவினரை கரூரில் இருந்து வரவழைத்து  விசாரணை செய்து அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சாலை  மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Tags : hospital ,hospitalization , Family restraint for a mentally ill person treated for abdominal pain: Bullying in hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...