×

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை: கனமழை தொடர்வதால் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிராமங்களில் உள்ள வயல்களில் உளுந்து, சோளம், கம்பு, நெற்பயிர்கள்  மழைநீரில் மூழ்கி சேதமடைந்து விட்டன. சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளதால் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும்  குமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும்  கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது நாளாக இன்றும் கனமழை தொடர்கிறது. சிவகங்கை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை  கொட்டியது. இதனால் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்; கண்ணீரில் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நெல், சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர் விடும் தருவாயில் உள்ளன. மிளகாய், மல்லி, உளுந்து போன்ற தோட்டப்பயிர்கள் செழிப்பாக வளர்ந்த நிலையில் உள்ளன.  ஆனால் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்வதால் பாப்பாகுளம், மீனங்குடி, பள்ளனேந்தல், சாத்தங்குடி, வெள்ளாங்குளம், கடுகுசந்தை, சத்திரம், கருங்குளம், பூதங்குடி, பெரியகுளம், எஸ்.தரைக்குடி, வெள்ளப்பட்டி, கொண்டுநல்லான்பட்டி,  கொக்கரசன்கோட்டை, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி உட்பட சுமார் 20 கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் பயிர்கள்
மூழ்கின.
பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து பாப்பாகுளம் விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நீரில்  மூழ்கி, அழுகி  விட்டன. கடன் வாங்கி களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளை செய்து வந்தோம். பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள  விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு தொகையை விரைந்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்
ளனர்.

மழைக்கு 5 வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூவன்பட்டியில் கொட்டிய மழையால் விவசாயி வெள்ளைக்கண்ணுவின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அவருக்கு, காலில் காயம் ஏற்பட்டது. திருக்களபட்டியில் மரம்  சாய்ந்து 2 மின்கம்பங்கள் மீது விழுந்ததால் பல மணி நேரம் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. மருதிப்பட்டியில் அழகுரத்தினம் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பகுதி, குமராயி மற்றும் மந்தை அருகே சத்தியா என்பவரின் வீட்டின் பக்கச்சுவர்  இடிந்து விழுந்தது. மேலும், திருப்புத்தூர், புதுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூதாட்டி கமலம் (69). இவரது வீட்டின் சுவரும் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. மேற்கூரையும் சரிந்து விட்டது. தண்ணீர் பிடிக்க சென்றிருந்ததால், கமலம்  அதிர்ஷ்சவசமாக உயிர் தப்பினார்.

ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலில் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. பாக்  ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசுவதால் கடல்  கொந்தளிப்பாக  காணப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல  வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு  செல்லாததால் இதுவரை ரூ.5 கோடிக்கும் மேல் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்

ராமநாதபுரத்தில் 94 மிமீ மழை...!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 51.98 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 831.8 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் கடந்த 24 மணி  நேரத்தில் 94 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரம் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) விபரம்: கடலாடி 30, வாலிநோக்கம் 41.40, கமுதி 24.20, பள்ளமோர்குளம் 26, முதுகுளத்தூர் 52, பரமக்குடி 42.20, மண்டபம் 36, ராமநாதபுரம்  94, பாம்பன் 41.50, ராமேஸ்வரம் 78.20, தங்கச்சிமடம் 12, ஆர்.எஸ்.மங்கலம் 69, தீர்த்ததாண்டானம் 76, திருவாடானை 66.80, தொண்டி 63.50,  வட்டாணம் 79.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக இளையான்குடியில் 42 மி.மீ மழை பதிவானது. மானாமதுரையில் 24, தேவகோட்டையில் 20.4, திருப்பத்தூரில் 19.4, காளையார்கோவிலில் 17.8, சிவகங்கையில் 11, காரைக்குடியில் 8.2,  திருப்புவனத்தில் 5.2 மழை பதிவாகியுள்ளது.


Tags : Ramanathapuram ,districts ,Sivagangai , Heavy rains continue in Ramanathapuram and Sivagangai districts
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...