×

100 நாட்களை கடந்த சிறை வாசம் முடியுமா?: ஐ.என்.எக்ஸ்.மீடியா அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும்  அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இதில் சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கிலும்  கைதானார்.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு இதுவரை 5 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அமலாக்கத்துறை  வழக்கில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ளது. இதற்கிடையே, சில நாட்கள் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து  விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. நாளை உச்சநீதிமன்றம் அளிக்கவுள்ள  தீர்ப்பு மூலம் ப.சிதம்பரத்தின் சிறை வாசம் முடியுமா? இல்லை தொடருமா? என தெரியவரும்.

ஜாமீன் வழங்க காங்கிரஸ் கோரிக்கை:

காங்கிரஸ் கட்சி டுவிட்டர் வலைத்தளத்தில், ‘‘சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களில் பல வெளிப்படையான தவறுகள் இருப்பது தெரிகிறது. அவைகள் தங்களது அரசியல் ஆசான்கள் உத்தரவின் பேரில் இந்த வெறுக்கத்தக்க  வேலையை செய்துள்ளன’’ என்று கூறியுள்ளது.

மகளிர் காங்கிரஸ் டுவிட்டரில் ‘ப.சிதம்பரத்தை விடுதலை செய்’ என்ற தலைப்பில் கருத்துகளை தெரிவித்துவருகிறது. இது மிகவும் வைரலாக பரவுகிறது. மகளிர் காங்கிரஸ் தலைவி சு‌‌ஷ்மிதா தேவ், ‘‘ஆளுங்கட்சி புலனாய்வு அமைப்புகளை  தவறாக பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கி வருகிறது. இப்படி அவர்கள் மீது வழக்குகளை போடுவதுதான் புதிய இந்தியா’’ என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, ‘‘ப.சிதம்பரம் 100 நாட்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது, தங்களுக்கு எதிரானவர்களுக்கு தொல்லை  கொடுக்கும் மிகமோசமான செயலே தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபரின் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டியது கோர்ட்டின் கடமை’’ என்றார்.


Tags : Supreme Court of India ,UNX ,Chidambaram , Supreme Court to decide on bail in the case of INX Media Enforcement
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்