வாரந்தோறும் ரூ.பல லட்சம் வியாபாரம் நடக்கும் பொய்கை மாட்டுச்சந்தை சேறும் சகதியுமாக மாறிய அவலம்

வேலூர்: வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் அடிப்படை வசதியின்றி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.  வேலூர் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள்  விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.வழக்கமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள், எருது மற்றும் உழவு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த சந்தையில் அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வருவார்கள்.

இங்கு சுமார் ரூ.3 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாகும். இவ்வாறு வாரந்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதி  என்பது இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மாட்டு சந்தை முழுவதும் குளம்போல் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இன்று சுமார் ஆயிரம் கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால்  இந்த நிலைமையை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு தேங்கியுள்ள கொசுக்களால் தங்களுக்கும் காய்ச்சல் வருமோ என இன்று சந்தைக்கு வந்தவர்கள் பீதி அடைந்தனர். எனவே  இந்த மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதே வியாபாரிகள், விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>