×

முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா குழந்தைகளின் கல்வியைத் தடுக்கும் வங்கதேசம்: தனியார் மனித உரிமை அமைப்பு அறிக்கை

வங்கதேசம்: முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா குழந்தைகள் கல்வி பயில்வதை வங்கதேசம் தடுப்பதாக தனியார் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ’Human Rights Watch’ என்ற தனியார் மனித உரிமை அமைப்பு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. நாங்கள் மனிதர்கள் இல்லையா? என்ற தலைப்பில் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் கல்வியை வங்கதேசம் தடுத்துள்ளது. முகாம்களில் உள்ள குழந்தைகள் கல்வி பயில உள்ள தடைகளை வங்கதேசம் நீக்க வேண்டும். வங்கதேசம் மற்றும் மியான்மர் அரசு ரோஹிங்கியா விவகாரத்தில் தங்கள் போக்கை மாற்ற சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை அடைந்தது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு உலக அரசியலில் அவப் பெயர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Bangladesh ,Rohingya ,children ,camps ,human rights organization , Camp, Rohingya Children, Education, Prevention, Bangladesh, Private Human Rights Organization, Report
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...